வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை: தொடர் திருட்டால் பொதுமக்கள் பீதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த பொன்விளைந்த களத்தூர் பெருமாள்கோயில் சன்னதித்தெரு பகுதியில் வசித்து வருபவர் தரணிதரன் (45). இவர் திருமணம், கோயில் வைபவங்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு நேரிலும், ஆர்டரின் பேரிலும், சமையல் செய்து தரும் தொழில் செய்து வருகிறார். பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வீட்டை பூட்டிவிட்டு. இவர் தம் குடும்பத்தோடு சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டியிருந்த வீட்டை உடைத்து பீரோவில் இருந்த 20 சவரன் தங்க நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளி, 60ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

நேற்று வீட்டிற்கு திரும்பிய தரணிதரன். வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்கள் திருடு போனது தெரியவந்துள்ளது. உடனே, செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்படி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, காஞ்சிபுரத்திலிருந்து தடயவியல் நிபுணர்களை வரவழைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பொன்விளைந்த களத்தூரில், வீட்டை உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். இதுவரைகொள்ளையர்களை போலீசார் பிடிக்கவும் இல்லை, திருட்டு போன நகைகளை பறிமுதல் செய்யவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

Related Stories:

>