கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி சகோதரர்கள் பலி

ஊத்துக்கோட்டை: பூந்தமல்லி பாப்பன்சத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ். இவர், அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் இருந்தனர். ஜெயச்சந்திரன் (16), 11ம் வகுப்பும், மனோஜ்குமார் (12), 6ம் வகுப்பு படித்து வந்தனர். இருவரும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் அடுத்த சேத்துப்பாக்கம் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றனர். இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையில் சிறுவர்கள் இருவரும் அங்குள்ள கொசஸ்தலை ஆற்றில் குளிப்பதற்காக தனது தாத்தாவை அழைத்துக்கொண்டு சென்றனர்.

தாத்தா ஆற்றின் கரை மீது அமர்ந்திருக்க பேரன்கள் ஜெயச்சந்திரன், மனோஜ்குமார் ஆகிய இருவரும் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கினர். அப்போது, எதிர்பாராத விதமாக சிறுவர்கள் இருவரும் நீரில் மூழ்கினர். இதையறிந்த அவர்களது தாத்தா, பேரன்களை காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டார். சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து  சிறுவர்களை தேடி ஒருமணி நேரத்திற்கு பிறகு சடலமாக மீட்டனர். இது குறித்து வெங்கல் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபபி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சிறுவர்கள் ஆற்றில் மூழ்கி இறந்ததால் சேத்துப்பாக்கம் கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

Related Stories:

>