×

சி.டி.எச் நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அபாயம்

ஆவடி: சென்னையில் இருந்து பாடி, அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், வேப்பம்பட்டு, திருவள்ளூர், திருத்தணி வழியாக திருப்பதிக்கு சி.டி.எச் சாலை செல்கிறது. இச்சாலையை சுற்றியுள்ள பகுதியில் பொறியியல், கலை கல்லூரிகள், பள்ளிகள், தொழிற்சாலைகள், அரசு, தனியார் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் சி.டி.எச் சாலை எப்போதும் பரப்பரப்பாக இருக்கும். இச்சாலையில், பல இடங்களில் மாடுகள் குறுக்கும், நெடுக்குமாக நடமாடுகின்றன. இவைகள் பல நேரங்களில் சாலையின் முக்கிய பகுதிகளில் படுத்து தூங்குகின்றன.

இதுகுறித்து, பொதுமக்கள் கூறுகையில், சி.டி.எச் சாலையில் குறுக்கே செல்லும் மாடுகள் மீது இரு சக்கர வாகன ஓட்டிகள் மோதி விபத்தில் சிக்குகின்றனர். குறிப்பாக, திருமுல்லைவாயல், ஆவடி, செவ்வாபேட்டை, தொழுவூர், காக்களூர், திருவள்ளூர், திருபாச்சூர், பாண்டூர், பட்டரைபெரும்புதூர், நாராயணபுரம் ஆகிய இடங்களில் உள்ள சி.டி.எச் சாலையில் மாடுகள் அதிக அளவில் நடமாட்டம் உள்ளது. மேற்கண்ட பகுதிகளில் நாளுக்கு நாள் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன.
மேலும், மாடுகளால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளும் அவதிப்படுவதுடன் விபத்துக்குள்ளாகின்றனர். மேலும், வீட்டில் இருந்து மாடுகளை உரிமையாளர்கள் மேய்ச்சலுக்காக காலையில் அவிழ்த்து விடுகின்றனர். பின்னர், அவர்கள் அவைகளை பற்றி கண்டு கொள்ளுவதில்லை.  

மேலும், சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் மீது மாடுகள் முட்டி மோதுகின்றன. சாலையில் குறுக்கிடும் மாடுகளால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினமும் அச்சத்துடன் தான் சாலையில் நடந்து செல்கின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், சாலை, தெருக்களில் மாடுகளை அவிழ்த்து விடும் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறோம். அதனை மீறி வீட்டுகளில் உள்ள தொழுவத்தில் இருந்து மாடுகளை அவிழ்த்து விட்டால் உரிமையாளர்களுக்கு சட்டப்படி நோட்டீஸ் கொடுத்து அபராதம் விதிக்கப்படும் என்றார்.


Tags : highway ,CDH , Accident risk by cows roaming on CDH highway
× RELATED சென்னை – பெங்களூரு தேசிய...