நடுரோட்டில் மனநலம் பாதித்த வாலிபர் ரகளை

ஆலந்தூர்: உள்ளகரம் இளங்கோ தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி(21). மனநலம் பாதிக்கப்பட்டவர். நேற்று தனக்கு சாமி வந்து விட்டதாக உறவினர்களிடம் கூறி வீட்டில் இருந்த 2 பட்டாக்கத்தியை எடுத்துக்கொண்டு தெருவுக்குள் வேகமாக ஓடினார். அப்போது அவரது பெரியம்மா அஞ்சலி(55) அவரை தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி அவரது வலது கையில் வெட்டினார். மேலும் எதிரே வந்த ஆட்டோவை கத்தியால் பலமாக தாக்கி அதன் கண்ணாடியை உடைத்தார். வெளியே வர முயன்ற ஆட்டோ டிரைவர் கணேசனை வெட்ட முயன்றார். இதை பார்த்த பழவந்தாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், ஓடிவந்து சுப்பிரமணி கையில் இருந்த அரிவாளை பிடுங்க முயன்றார்.

அவரை பைக்குடன் பிடித்து தள்ளிவிட்டு அவரையும் கத்தியால் வெட்ட முயன்றார். சுதாகரித்துக்கொண்ட எஸ்ஐ அவரை இறுக்கமாக பிடித்தபடி கட்டிப்புரண்டு சண்டை போட்டார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சுப்பிரமணியை பிடித்து கயிற்றால் கட்டி அமரவைத்தனர். தகவலறிந்த மடிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுப்பிரமணியை மீட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>