ரயில் நிலையங்களில் பெண்கள் பாதுகாப்புக்காக கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

தாம்பரம்: கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கமாக மின்சார ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பொதுமக்கள் சென்று வந்தனர். இதனால், புறநகர் ரயில் நிலையங்கள் தினமும் பரபரப்பாக காணப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கொரோனா தொற்றால் பகல் நேரங்கள் தவிர, மாலை மற்றும் இரவு நேரங்களில் குறைந்த அளவில் மட்டுமே பயணிகள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். அவ்வாறு பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசாரும் குறைவாகவே உள்ளனர்.

இதனால் ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதில் ஒன்றாக சமீபத்தில், தாம்பரம் ரயில்வே பணிமனையில் தற்காலிக ஊழியர்கள் 2 பேரால் 40 வயது மதிக்கதக்க பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடைமேடையில் இருந்து பணிமனைக்கு சென்ற ரயிலில் பயணிகள் இருக்கிறார்களா என ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை செய்யாததே இந்த சம்பவத்திற்கு முழு காரணம் என பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

எனவே ரயில் நிலையங்களில் பெண்கள் பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் நியமிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து ரயில் பயணிகள் கூறுகையில், ‘‘நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் அதிகளவில் பொருத்தப்பட்டதுடன் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது. ஆனால் தற்போது ரயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு குறைந்து இருப்பதுடன் பெரும்பாலான ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் சரிவர இயங்குவதில்லை.

இதனால் ரயில் நிலையங்களில் திருட்டு, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, தற்போதைய கொரோனா சூழலில் இரவு நேரங்களில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பயணிகள் வருவதால் ரயில் மற்றும் ரயில் நிலையங்கள் வெறிச்சோடி உள்ளது. இதனை பயன்படுத்தி கொண்டு சில சமூக விரோதிகள் பயணிகளிடம் வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்” என்றனர்.

* எங்கு அதிகம்

இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் குறிப்பாக, மீனம்பாக்கம் ரயில் நிலையம் தொடங்கி திரிசூலம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் சானடோரியம், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் என செங்கல்பட்டு வரை உள்ள ரயில் நிலையங்களில் அதிகம் நடைபெறுகிறது.

Related Stories:

>