அமெரிக்க கேபிடல் கலவர விவகாரத்தில் டிரம்பை முடக்கி வைத்த இந்திய வம்சாவளி பெண்: சர்வதேச பத்திரிகைகள் பாராட்டு

வாஷிங்டன்: ‘அமெரிக்க கேபிடல்’ கலவர விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பின் டுவிட்டர் கணக்கை முடக்கி வைத்த இந்திய வம்சாவளி விஜயா கடேவை சர்வதேச பத்திரிகைகள் பாராட்டி வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்காவில் தற்போதைய அதிபர் டிரம்பின் ஆதரவாளர்கள் நடத்திய கலவரத்தால் வெள்ளை மாளிகை சூறையாடப்பட்டது. ‘அமெரிக்க கேபிடல்’ என்ற அந்த கலவரத்தைத் தொடர்ந்து வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்டதாகக் கூறி அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டது. பின்னர், தொடர்ந்து அதேபோல வன்முறையைத் தூண்டும் பதிவுகளை பதிவிட்டதால் டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டது. மிகப் பெரிய வல்லரசு நாட்டின் அதிபரின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு ஜெர்மன் உள்ளிட்ட நாட்டு தலைவர்களும் வருத்தம் தெரிவித்துக் கொண்டனர்.

நிலைமை இவ்வாறு இருக்க டொனால்ட் டிரம்பின் டிவிட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கும் முடிவை எடுத்த குழுவின் தலைவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஜயா கடே என்பவர்தான்.

இவர் டுவிட்டர் நிறுவனத்தின் சட்டம், கொள்கை மற்றும் நம்பிக்கை மற்றும் பாதுகாப்புப் பிரச்னைகளின் தலைவராக பணியாற்றி வருகிறார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பிறந்த விஜயா கடே, தனது 3வது வயதில் பெற்றோருடன் டெக்சாஸ் மாகாணத்திற்கு குடிபெயர்ந்துவிட்டார். விஜயா கடேவின் தந்தை மெக்சிகோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ரசாயன பொறியாளராக பணியாற்றியவர். நியூ ஜெர்சியில் விஜயா கடே, தனது பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், கார்னெல் பல்கலைகழகத்தில் தொழில் மற்றும் தொழிலாளர் நலத்துறை படிப்பு, அதன்பின்னர் நியூயார்க் பல்கலைகழகத்தில் சட்டப் படிப்பை முடித்தார். பின்னர் 2011ம் ஆண்டில் சட்டப்படிப்பை முடித்ததால், டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை வழக்கறிஞராக பணியில் சேர்ந்தார். ஏற்கனவே இவர், பே ஏரியாவைச் சேர்ந்த சட்ட நிறுவனத்தில் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

டுவிட்டர் நிறுவனத்தில் பணியில் ேசர்ந்த பின்னர், அந்த நிறுவனத்தின் முக்கியத் தலைவர்களுடனான சந்திப்பின்போது விஜயா காடே முக்கியத்துவமான நபராக அறியப்பட்டார். உதாரணமாக டுவிட்டர் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜாக் டோர்சி கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்தபோது, அவருடன் விஜயா கடேவும் ஓவல் அலுவலகத்தில் இருந்தார். அதேபோல, 2018ம் ஆண்டு பிரதமர் மோடி உடனான சந்திப்பின்போது, டோர்சியுடன் விஜயாவும் உடனிருந்தார். இவரது செயல்பாடுகளை அமெரிக்காவின் முன்னணி பத்திரிகைகள் பெருமைப்படுத்தி உள்ளன. அதன் மூலம் அவர் சில ஆண்டுகளுக்கு முன்பே சர்வதேச கவனத்தை பெற்றார். ‘தி இன்ஸ்டைல்’ என்ற பத்திரிகை ‘நீங்கள் கேள்விப்படாத மிக சக்திவாய்ந்த சமூக ஊடக நிர்வாகி. 2020 - உலகை மாற்றும் பெண்களை சந்திக்கவும்’ என்றும் பாராட்டி பெருமைப்படுத்தியுள்ளது. இவ்வாறாக சர்வதேச புகழ்பெற்ற விஜயா கடே, சமீபத்தில் டிரம்புக்கு எதிராகவே உடனடி நடவடிக்கை எடுத்ததற்காக பாராட்டப்பட்டு வருகிறார்.

Related Stories:

>