×

விவசாயிகள் போராட்டத்தில் தீவிரவாத அமைப்பு தொடர்பு : பஞ்சாபி நடிகர், விவசாய சங்கத் தலைவர் உள்ளிட்ட 40 பேருக்கு சம்மன் அனுப்பியது என்ஐஏ..!

புதுடெல்லி : விவசாயிகள் போராட்டத்தில் சர்வதேச தொடர்பு குறித்த விசாரணைக்கு ஆஜராக பஞ்சாபி நடிகர், விவசாய சங்க தலைவருக்கு தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன் அனுப்பி உள்ளது. தலைநகர் டெல்லியின் எல்லையில், மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி அரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த 50 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் நடத்திய 9 கட்ட பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படாத நிலையில், வரும் 19ம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இதற்கிடையே போராட்டத்தில் பங்குபெற்றுள்ள விவசாய சங்கத் தலைவர் பல்தேவ் சிங் சிரஸாவுக்கு எதிராக தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன் அனுப்பி உள்ளது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு வட்டாரங்கள் கூறுகையில், ‘விவசாய சங்கத் தலைவர் பல்தேவ் சிங் சிரஸா ஒரு சாட்சியாக விசாரிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சிஆர்பிசி சட்டம் 160 கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 15ம் தேதி எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. அந்த எப்ஐஆரில், சீக்கியர்களுக்கான நீதி, காலிஸ்தான் ஜிந்தாபாத் அமைப்பு, சர்வதேச பாப்பார் கால்ஸா போன்ற காலிஸ்தான் அமைப்புகள் போன்றவை நாட்டில் அச்சமிகுந்த சதித்திட்டத்தை உண்டாக்குகின்றன என்ற அடிப்படையின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் மக்களிடையே அச்சத்தை உண்டாக்கி மற்றும் மத்திய அரசாங்கத்திற்கு எதிராக வெறுப்பினை தூண்டி வருவதாவும் கூறப்பட்டுள்ளது.

சில தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் நிதி உதவி செய்வதாவும், அமெரிக்கா, கனடா, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் இந்தியாவுக்கு எதிராக எதிர்ப்பு கோஷங்களை எழுப்ப ஆதரவு தெரிவித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த பிரசாரங்களை மேற்கொள்ளும் பணியில்  பஞ்சாபி நடிகர் தீப் சிங் சித்து, குர்பந்த்வான்ட் சிங் பன்னுந், பரம்ஜித் சிங் பம்மா மற்றும் ஹர்பித் சிங் நிஜ்ஜார் உள்ளிட்ட 40 பேர் ஈடுபட்டுள்ளனர். அதனால், அவர்கள் 17ம் தேதி (இன்று) விசாரணை அமைப்பு முன் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தன. இந்நிலையில், விவசாய போராட்டத்தில் சீக்கியர்கள் நீதி குறித்து மத்திய அரசு தரப்பில் நாளை உச்ச நீதிமன்றத்தில் பதில் ஆவணம் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்ப்பாக்கப்படுகின்றது.

Tags : NIA ,actor ,Punjabi ,union leader , என்ஐஏ
× RELATED பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு...