×

அரண்களை சிதைக்கும் அலட்சியம் அழிக்கப்படும் மலைவளத்தால் மாறுது சேலத்தின் அடையாளம்

* ஜல்லிக்காக சுரண்டப்படும் அவலம்
* இயற்கை சீற்றங்களுக்கான அபாயம்

சேலம்: சைலம் என்றால் மலை என்று  பொருள். மலைகள் சூழ்ந்த பகுதி என்பதால் சைலம் என்று அழைக்கப்பட்டு, பின்னர் சேலம் என்று உருமாறிய  பெருமைக்குரிய ஊர் சேலம். சேலம் மாவட்டத்தில் சேர்வராயன்மலை, கல்வராயன்மலை, கஞ்சமலை, ஜருகுமலை, பச்சமலை, கொடுமலை, நகரமலை, மேலகிரிமலை, குட்டிராயன்மலை போன்ற மலைகள் உள்ளன. இந்த மலைகள் சேலம், திருச்சி, தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்ட மக்களை, நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் இருந்து காப்பாற்றி வருகிறது. இந்த மலைகளில் ஊற்றெடுத்து வழிந்தோடும் நீரானது சேலம், தர்மபுரி மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களின் பாசன தேவையை பூர்த்தி செய்கிறது. இதேபோல் ஜருகுமலை, கஞ்சமலை, நாமமலை நீரூற்றுகளால் பல நூறு ஏக்கர் நிலங்கள் பயனடைகின்றன. இங்குள்ள பல மலைகளில் கனிம வளங்கள் அதிகளவில் உள்ளது. இப்படி பல்வேறு வழிகளில் சிறப்பு பெற்ற மலைகள், சமீபகாலமாக அதிகளவில் சிதைக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக மல்லூர், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மலைகளில் கனிமம் அதிகளவில் சுரண்டப்பட்டுள்ளது. பனமரத்துப்பட்டியில் உள்ள சிறிய மலை, இன்னும் ஒரு ஆண்டில் முழுமையாக காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் உள்ள மலைகளும், இதே ரீதியில் தான் உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக கட்டுமான பணிக்காக பாறைகள் அதிகளவில் சுரண்டப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, பல நூறு மடங்கு கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், ஜருகுமலை அடிவாரமான ஊத்துமலை ஒரு பகுதி முழுமையாக சுரண்டப்பட்டுள்ளது.  கருங்கல்பட்டியில் குட்டிக்கரடு என்ற மலை இருந்தது. இந்த மலையும் சுரண்டி எடுக்கப்பட்டுள்ளது. சேர்வராயன் மலையில் மேக்னசைட் என்ற கனிமம் அதிகளவில் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் இன்னும் 5 ஆண்டுகளில் இந்த பகுதியில் மலை இருந்தற்கான சுவடுகளே இல்லாமல் போகும் அளவுக்கு மலை வளம் சுரண்டப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, ஆற்று மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆற்று மணலுக்கு மாற்றாக செயற்கை மணல் என்று அழைக்கப்படும் எம்.சாண்ட், கட்டுமானப் பணிக்கு அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த எம்.சாண்டுக்காக பாறைகள் உடைப்பது அதிகரித்து வருகிறது. தற்போது 95சதவீத கட்டுமான பணிகளுக்கு எம்.சாண்ட் தான் பயன்படுத்தப்படுகிறது. எம்.சாண்ட் தயாரிக்கவும், கருங்கல் ஜல்லிக்காகவும், சாலை அமைக்கவும் தினசரி பல்லாயிரம் டன் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.  இப்படி நாளுக்கு நாள் மலைவளங்கள் சுரண்டுப்பட்டு வருவதால், மலையை நம்பி வாழும் மிருகங்கள், பறவைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சேர்வராயன் மலைத்தொடரில் காட்டெருது, மான், நரி, முயல் உள்பட பலவகையான மிருகங்கள் வாழ்கின்றன. இதேபோல் கிளி, சிட்டுக்குருவி, பருந்து, மைனா, கானாங்குருவி, மயில் உள்பட பலவகை பறவைகள் வாழ்ந்து வருகின்றன. மலை வளங்கள் அழிக்கப்பட்டு வருவதால், இந்த பறவைகளின் வாழ்விடமும் மாறி வருகின்றன.

இயற்கை வளங்கள் அழிப்பால் மலைகளில் வசித்த வந்த மான், காட்டெருது உள்ளிட்ட விலங்குகள் ஊருக்குள் படையெடுத்து வருகின்றன. மேலும் பறவைகள் வாழ்விடம் தேடி வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றன. மயில்கள் ஊருக்குள் படையெடுத்து வருகிறது. பாறைக்கு வைக்கும் வெடியால் நிலத்தடி நீர்மட்டம் பாதை மாறி போகிறது. மேலும் மலைகளுக்கு அருகே வசிப்பவர்களின் வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்படுகிறது. இதய நோயாளிகள், குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கிரசரால் அருகே உள்ள வயல்களின் மண்ணின் தன்மை மாறிவிடுகிறது. இதில் விளையும் காய்கறிகளின் மேல் பாறை துகள்கள் பரவி இருக்கின்றன. இதே ரீதியில் இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டால், எதிர்காலத்தில் நாம், ெபரும் இயற்கை சீற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இயற்கை ஆர்வலர்களும், புவியியல் வல்லுநர்களும் எச்சரித்துள்ளனர்.

மலைக்கு இயற்கை சீற்றங்களை தாங்கும் சக்தி உள்ளது. இந்த மலைகளின் அடிப்பகுதியில் இருந்து கனிம வளங்கள் அழிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மலைகளை சுரண்டுவதால் நிலநடுக்கம் வரும்போது, அதை தாங்கும் சக்தி மலைகளுக்கு இருக்காது. இதனால், பொதுமக்கள் தான் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள். எனவே, வருங்கால சந்ததியினரை கவனத்தில் கொண்டு, இயற்கை வளங்களை அழிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.

விதிமீறி சுரண்டுவோர் மீது கடும் நடவடிக்கை
கனிம வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சேலம் மாவட்டத்தில் புறம்போக்கு நிலம், தனியார் பட்டா நிலங்களில், அரசின் விதிமுறைக்கு உட்பட்டு டெண்டர் விடப்பட்டு, பாறைகள் வெட்டி எடுக்கப்படுகிறது. அதன்படி 70 கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விதிமுறையை மீறி வெட்டி எடுக்கப்படும் இடங்களை கண்டறிந்து, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து ரோந்து பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். விதிகளை மீறி, கனிமவளங்களை சுரண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.

தீமைகளை சொன்னால் கேட்கவே மறுக்கின்றனர்
இயற்கை ஆர்வலர் பியூஷ் கூறுகையில், ‘கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் புயல், வெள்ளம், நிலஅதிர்வு போன்ற இயற்கை சீற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதில் சேலம் மாவட்டத்தில் அதிக பாதிப்புகள் இல்லாததற்கு அரணாக நிற்கும் மலைகள் ஒரு காரணம். ஆனால், சமீபகாலமாக இங்குள்ள மலைகள் சிதைக்கப்பட்டு, இயற்கை வளங்கள் சுரண்டப்படுகிறது. சேலம்-சென்னை வழிச்சாலை திட்டத்தில் கூட, மலைகள் அதிகளவில் உடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. முந்தைய ஆட்சி காலத்தில் இயற்கை வளங்களை சிதைப்பதால் ஏற்படும் தீமைகளை எடுத்துக் கூறினால் ஏற்றுக் கொள்ளும் நிலை இருந்தது. தற்போதைய ஆட்சியில் தீமைகளையும், எதிர்கால அபாயங்களையும் எடுத்துச் சொன்னால் கேட்கவே மறுக்கின்றனர். இது மிகவும் வேதனைக்குரியது,’ என்றார்.

இயற்கையை அழித்தால் உருவாக்கவே முடியாது
அசோகர் பசுமை இல்ல நிறுவனர் கணபதி கூறுகையில், ‘சேலம் மாவட்டத்தை இயற்கை பேரிடரில் இருந்து மலைகள் தான் காத்து வருகிறது. அதனால் தான் சேலத்தை பொறுத்தமட்டில், பெரிய அளவில் பேரிடர் எதுவும் நடப்பதில்லை. சமீப காலமாக மலைகள் அதிகளவில் சுரண்டப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தேவைகளுக்காக கருங்கல் எடுக்க அரசால் அளவு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் சிலரால் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் கருங்கல் சுரண்டி எடுக்கப்படுகிறது. மற்ற பொருட்களை உற்பத்தி செய்யலாம். ஆனால் இதுபோன்ற கனிமங்களை நம்மால் மீண்டும் உருவாக்க முடியாது. இந்த கனிமங்கள் தான் நம்மை பல ஆண்டாக காத்து வருகிறது. அவற்றை காப்பது நமது கடமையாகும். இனிவரும் வரும் காலத்தில் மலைகளை சுரண்டுவதை குறைத்து கொள்ள வேண்டும்,’ என்றார்.

இந்த நிலை நீடித்தால் மலைகளே இருக்காது
சமூக ஆர்வலர் ராமகவுண்டனூர் சுப்ரமணி கூறுகையில், ‘சேலத்தின் அடையாளமான மலைகள் உடைக்கப்படுகிறது. அவற்றை சார்ந்துள்ள இயற்கை வளங்கள் சுரண்டப்படுகிறது. இதனால் அதை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான அரிய உயிரினங்கள் அழிகிறது. இப்படி தொடரும் அவலத்தால், எதிர்காலத்தில் என்னென்ன அபாயங்கள் நேரும் என்பதை அரசும், அதிகாரிகளும் உணர்ந்ததாக தெரியவில்லை. அதிலும் சமீப காலமாக குவாரிகளில் நிர்ணயித்த அளவை விட அதிகமாக, கருங்கற்களை வெட்டி எடுக்கின்றனர். இதை இப்போதே தடுக்கவில்லை என்றால், அடுத்த சில ஆண்டுகளில் சேலத்தை சுற்றி மலைகளே இல்லாத நிலை ஏற்படும். மேலும், பாறைகள் வெட்டி எடுத்து வாகனங்களில் எடுத்துச்செல்லும்போது, சாலைகளும் விரைவில் சேதமடைந்து விடுகிறது,’’ என்றார்.

Tags : Salem ,forts , The sign of Salem, which changes due to the mountains, which destroy the forts
× RELATED இறைச்சி கடைகள் செயல்பட தடை