×

மாலகோயில் திருவிழாவில் உருவார பொம்மைகளுடன் பக்தர்கள் குவிந்தனர்

உடுமலை: உடுமலை அடுத்துள்ள சோமவாரப்பட்டி மாலகோயில் திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது. நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். உடுமலை அருகே உள்ள சோமவாரப்பட்டியில் மாலகோயில் என அழைக்கப்படும் ஆல்கொண்டமால் (கிருஷ்ணன்) கோயில் உள்ளது. பொங்கல் திருநாளையொட்டி, இந்த கோயிலில் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், 3 நாள் திருவிழா கொண்டாடப்படும். கால்நடைகள் நோய் நொடியின்றி வாழவும், செல்வம் பெருகவும், கால்நடைகளின் உருவார பொம்மைகளை நேர்த்திக்கடன் செலுத்தியும், கன்றுகளை தானமாக அளித்தும், சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்தும் விவசாயிகள் கொண்டாடுகின்றனர்.

நேற்று முன்தினம் திருவிழா துவங்கியது. சிறப்பு பூஜைகள், அபிசேகங்கள் நடைபெற்றன. 2-வது நாளான நேற்று சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். திருவிழா கடைகள் களைகட்டின. ராட்டினங்கள் உள்பட குழந்தைகளின் பொழுதுபோக்கு உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதில் பெரியவர்கள், குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர். கோயிலில் உள்ள பெரிய நந்தி சிலை முன்பு, தாங்கள் கொண்டு வந்த உருவார பொம்மைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். அவை மலைபோல் குவிந்தன. நேற்று வரை 12 கன்றுக்குட்டிகள் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்டன.

கார்களுக்கு தடை
திருவிழாவுக்கு பக்தர்கள் கார்களிலும், இரு சக்கர வாகனங்களிலும் அதிகளவு வந்திருந்தனர். ஆனால் போலீசார் இரு சக்கர வாகனங்களை மட்டுமே அனுமதித்தனர். கார்கள் அனைத்தும் பெதப்பம்பட்டியிலேயே நிறுத்தப்பட்டன. இதனால் பக்தர்கள் சுமார் 4 கிமீ., தூரம் நடந்து சென்று சிரமத்துக்குள்ளாயினர். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என்பதால் கார்களை அனுமதிக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்கள் முககவசம் அணிந்து வந்திருந்தனர். திருவிழா இன்றுடன் (17-ம்தேதி) நிறைவடைகிறது.

Tags : Devotees ,festival ,Malakoil , Malakoil festival, figurine, devotees gathered
× RELATED தாய்லாந்தில் நடைபெற்ற பச்சை குத்தும் திருவிழா!!