×

கேரள மலபார் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ : அலறியடித்து ஓடிய பயணிகள்!!

திருவனந்தபுரம், மங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் வந்த மலபார் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலை திடீரென தீப்பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து திருவனந்தபுரத்துக்கு நேற்றிரவு மலபார் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இன்று காலை 7.45 மணியளவில் கொல்லம் அருகே இடவா என்ற பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது இன்ஜினுக்கு அடுத்தபடியாக இணைக்கப்பட்டிருந்த பார்சல் பெட்டி  தீப்பிடித்து எரிந்தது.

இதைக்கண்ட பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டது. அப்பகுதியினர் விரைந்து சென்று தீயை அணைக்க முயற்சித்தனர். மேலும் தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடம் விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர். தீப்பிடித்து எரிந்த பெட்டியில் ஏராளமான பைக்குகள் இருந்தன. இவை ஒன்றுடன் ஒன்று உரசியதில் தீ பிடித்திருக்கலாம் என தெரிகிறது. இந்த தீ விபத்தில் 3 பைக்குகள் முழுவதுமாக எரிந்து நாசமாயின. தொடர்ந்து பார்சல் பெட்டி கழற்றி விடப்பட்டு, ஒன்றரை மணி நேரத்துக்கு பின்னர் ரயில் புறப்பட்டு சென்றது.

இதனிடையே மலபார் எக்ஸ்பிரஸ் ரயிலின் சரக்கு பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தால் பயணிகளுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.மேலும் தீ பிடித்து எரிந்த சரக்கு பெட்டி கழற்றி விடப்பட்டு, பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாகவும் சரக்கு பெட்டியில் தீ பிடித்தது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Passengers ,Kerala Malabar Express , Kerala, Malabar Express
× RELATED செங்கல்பட்டு புறவழிச்சாலையில் லாரி...