×

இந்தியாவின் மெகா தடுப்பூசித் திட்டம்: வாழ்த்திய இலங்கை பிரதமர் ராஜபக்‌ச; நன்றி கூறிய பிரதமர் மோடி

டெல்லி : இந்தியாவில் தொடங்கப்பட்ட கொரோனா தடுப்பூசித் திட்டத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கைப் பிரதமர் ராஜபக்‌ச வாழ்த்து தெரிவித்துள்ளார். அதற்கு பிரதமர் மோடியும் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம், அஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனம் தயாரித்த ‘கோவிஷீல்டு’ மற்றும் ஐதராபாத்தின் பாரத் பயோடெக்-இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தயாரித்த ‘கோவாக்சின்’ ஆகிய இரு தடுப்பூசிகளை இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி தந்தது.

இதில், கோவிஷீல்டு மருந்தை புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து விநியோகம் செய்கிறது. அந்த வகையில், ‘மேட் இன் இந்தியா’ தயாரிப்பான இரு கொரேனா தடுப்பூசிகளை போடும் பணியை பிரதமர் மோடி நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார்.முதல் நாளில் மூன்று லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கத் திட்டமிடப்பட்ட நிலையில் 1.91 லட்சம் மக்கள் தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர்.

இது குறித்து இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச தனது ட்விட்டர் பக்கத்தில், உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டத்தை இந்தியா துவக்கி உள்ளமைக்கு வாழ்த்துகள்.இது மிகவும் முக்கியமான அடி. சீரழிக்கும் பெருந்தொற்றுக்கு முடிவு கட்டும் தருணம் தொடங்கிவிட்டது எனப் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். அவர் அந்த ட்வீட்டில், எங்களுடைய விஞ்ஞானிகள், முன்களப் பணியாளர்களின் அயராத உழைப்பு இந்தப் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது.தடுப்பூசியை வேகமாகத் தயாரித்தது ஆரோக்கியமான நோயற்ற உலகை உருவாக்கும் உலக நாடுகளின் கூட்டுமுயற்சியில் முக்கியத்துவம் வாய்ந்த பணி எனக் கூறினார்.

Tags : Modi ,India ,Rajapaksa ,Sri Lankan , India, Vaccine, Project, Rajapaksa
× RELATED நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த நடிகர் பிரகாஷ்ராஜ் அழைப்பு