×

கடலூர் பாதாள சாக்கடை திட்டத்தில் குளறுபடிகள்

அரசு இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண ரூ.47 கோடி மதிப்பில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பாதாளச் சாக்கடை திட்டம் கொண்டு வந்தது. இத்திட்டத்தை மூன்று கட்டமாகச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு, முதல் கட்டத்தில் 32 வார்டுகளும், இரண்டாம் கட்டத்தில் 10 வார்டுகளும், மூன்றாம் கட்டத்தில் 3 வார்டுகளும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன் பின்னர் 2017ம் ஆண்டும் மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.67 கோடியில் திட்டத்தை செயல்படுத்த கடலூர் நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், 13 இடங்களில் கழிவுநீர் பம்ப் செய்யப்பட்டு தேவனாம்பட்டினத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, இதனை 42 ஏக்கர் நிலத்தில் புல் வளர்க்கவும், அதிகளவு சுத்திகரிகப்பட்ட தண்ணீரை சிப்காட் தொழிற்பேட்டைக்கும், மீதியுள்ளதை கெடிலம் ஆற்றில் விடவும் திட்டமிடப்பட்டது.

பாதாள சாக்கடை திட்டத்தில் நகரில் 13 இடங்களில் பம்ப்பிங் சென்டர்கள் அமைக்கப்பட்டதில், தற்போது நகரில் 7 பம்ப்பிங் சென்டர்கள் மட்டும் பயன்பாட்டில் உள்ளன. இன்னும் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட பணிகள் தொடங்கப்படவில்லை.  தேவனாம்பட்டினத்தில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படாததால் கழிவு நீர் முழுவதும் உப்பனாற்றில் விடப்பட்டு ஆறு மாசுபடுத்தப்படுகிறது. இத்திட்டத்தை முறைப்படி செயல்படுத்தாமல் ஏகப்பட்ட குளறுபடிகளும், பல்வேறு ஊழல்களும் நடந்துள்ளதால் திட்டம் செயல்பாட்டிற்கு வந்தும், பலன் இல்லாமல் நகர மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

‘குடிநீரில் கழிவுநீர் கலக்கிறது’
முன்னாள் கவுன்சிலர் குணசேகரன் கூறும்போது, கடலூரில் திமுக ஆட்சியில் இருந்தபோது பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் வந்த அதிமுகவினர் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதாலேயே சரியாகச் செயல்படுத்தாமல் ஏகப்பட்ட குளறுபடிகள் செய்துள்ளனர். இன்னும் பல வார்டுகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. பாதாள சாக்கடை திட்டம் செயல்படும் வார்டுகளில் சரிவர பராமரிக்கப்படாமல், குடிநீர் குழாய்க்கு அருகில் பாதாள சாக்கடை குழாய் செல்வதால் குடி நீரில் கழிவு நீர் கலந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. பத்தாண்டுகளாக இத்திட்டம் சரிவரச் செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் நகர மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர், என்றார்.

‘குளறுபடிகளை சரிசெய்து வருகிறோம்’
நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலூர் நகராட்சி கடற்கரையோரம் அமைந்துள்ளது. இதனால் 10 அடியில் தண்ணீர் ஊறும் நிலை இருக்கின்றது. இதனால் பாதாள சாக்கடை அமைப்பதில் பல்வேறு சிரமங்களும், குளறுபடிகளும் ஏற்பட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகு பணிகள் 32 வார்டுகளில், 20 வார்டுகளில் முழுமையாகவும், 12 வார்டுகளில் பணிகள் நடந்தும் வருகிறது. அடுத்தபடியாக இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்ட பணிகளுக்கு திட்டம் தீட்டப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கிய பிறகு அந்த வார்டுகளிலும் பணிகள் தொடங்கப்படும். திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் இருக்கின்றன, அவற்றை சரி செய்து வருகிறோம், என்றார்.

‘வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்’

கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்க கூட்டமைப்பு பொதுச் செயலாளர் மருதவாணன் கூறுகையில், திட்டம் செயல்படுத்தப்பட்டபோது வீடுகள் வரை இணைப்பு வழங்க குழாய் பதிக்கப்பட வேண்டும். ஆனால் அதுபோல் குழாய் பதிக்கப்படவில்லை. தற்போது பல இடங்களில் சாலையில் துளை போட்டு இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் துளை போடும்பாது அந்த கற்கள் பாதாளச் சாக்கடையில் விழுந்து அடைப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் சாலை மட்டம் உயரமாகவும், வீடுகள் மட்டம் குறைவாகவும் இருப்பதால் வீடுகளில் கழிவு நீர் எதிரே நிற்கும் நிலை உள்ளது. பாதாள சாக்கடைக்கு சாலையில் போடப்பட்டுள்ள மெட்டல் மூடி தரமானதாகப் போடாததால் பல இடங்களில் உடைந்தும், பல இடங்களில் சாலை போடும் போது மூடிகளை உள்ளே வைத்து மேலே சாலைப் போடப்பட்டதால் சாக்கடையில் அடைப்பு ஏற்படும் போது அதனைச் சரி செய்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது. இன்னும் இரண்டாம், மூன்றாம் கட்ட பணிகள் தொடங்கப்படவில்லை.

இணைப்புகள் வழங்கும் பணியை தனியாரிடம் விட்டதால் அவர்களும், அப்போது இருந்த நகராட்சி அதிகாரிகளும் ஏற்கனவே இணைப்பு கொடுத்தவர்களுக்கு புதிய இணைப்பு கொடுத்தது போலவும், பாதாள சாக்கடை போடப்படாத தெருவில் உள்ளவர்களுக்கு இணைப்பு கொடுத்தது போலவும் முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது நகராட்சி நிர்வாகம் மீண்டும் டெபாசிட் கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பி வருகின்றது. இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நகராட்சி நிர்வாகம் பாதாளச்சாக்கடை திட்டத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள், ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், என்றார்.

Tags : Cuddalore, Sewer, mess
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி...