தட்கல் சிலிண்டர் புக்கிங்: 30 நிமிடத்தில் வீட்டுக்கே வரும் :இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அமலாகிறது

டெல்லி : இந்தியன் ஆயில் நிறுவனத்தில் புக்கிங் செய்த உடனே சிலிண்டர் டெலிவரி செய்ய தட்கல் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளனர். இத்திட்டம் முதலில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு 1.36 கோடி வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். தினமும் 2.50 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர் சப்ளையை காஸ் ஏஜென்சிகள் மூலம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் புக்கிங் செய்த 2, 3 நாட்களில் சிலிண்டர் விநியோகத்தை செய்கின்றனர்.

இதை 2 சிலிண்டர் இணைப்பு பெற்றவர்களும், ஒரு சிலிண்டர் இணைப்பு கொண்டவர்களும் வாங்கி வருகின்றனர். இரண்டு சிலிண்டர் வைத்திருப்பவர்கள், ஒன்று தீர்ந்தவுடன் மற்றொன்றை பயன்படுத்தி சமையல் செய்வதில் எவ்வித சிரமத்தையும் சந்திப்பதில்லை. ஆனால், ஒரு சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்கள், அந்த சிலிண்டர் காலியானதும், அடுத்த சிலிண்டர் தங்களது வீட்டிற்கு வரும் வரை சமையல் செய்வதில் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். காரணம், காலி சிலிண்டரை ஒப்படைத்து விட்டு தான், புதிய சிலிண்டரை பெற இயலும். அப்படி இருப்பதனால், வீட்டில் இருக்கும் ஒரு சிலிண்டர் காலியான பின்னரே புக்கிங் செய்து, அடுத்த சிலிண்டரை வாடிக்கையாளர்கள் பெற்று வருகின்றனர்.

இத்தகைய ஒரு சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில், புதிய சிலிண்டருக்கு புக்கிங் செய்தவுடனே அடுத்த சிலிண்டரை  டெலிவரி செய்யும் தட்கல் முறையை அமல்படுத்தவுள்ளனர். இந்த தட்கல் முறையில், வாடிக்கையாளர் புக்கிங் செய்த நாளிலேயே அவர்களின் வீட்டிற்கு சிலிண்டர் டெலிவரி ஆகிவிடும். ’தட்கல் எல்பிஜி சேவா’ மூலம் வெறும் அரை மணி நேரத்தில் வீட்டுக்கு சிலிண்டர் டெலிவரி கிடைக்கும். பிப்ரவரி 1ம் தேதி முதல் இச்சேவை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால், சமையல் செய்வதில் இருக்கும் சிரமமும், 2, 3 நாட்கள் சிலிண்டருக்காக காத்திருக்கும் நிலையும் நீங்குகிறது. தட்கல் புக்கிங் சிலிண்டரை பெறும்போது, அதற்கான கட்டணம் வழக்கமான சிலிண்டர் கட்டணத்தை விட சற்று அதிகமாக இருக்கும். இந்த தட்கல் முறையை விரைவில் அமல்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: