பாஜகவில் சேருகின்றேனா? : திரிணாமுல் எம்பி சதாப்தி ராய் பதில்

கொல்கத்தா : பாஜகவில் இணைய தாம் டெல்லி செல்லவிருப்பதாக வெளியான தகவலை திரிணாமுல் காங்கிரஸ் எம்பியான நடிகை சதாப்தி ராய் மறுத்துள்ளார்.மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த சில மாதங்களில் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் சிலர் பாஜகவில் ேசர்ந்து வருகின்றனர். இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்பியான நடிகை சதாப்தி ராய் டெல்லி சென்று அமித் ஷாவை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது.

ஆனால் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய சதாப்தி ராய், ‘முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு. மம்தாவின் உறவினரும் அமைச்சருமான அபிசேக்கிடம் தொகுதியில் நிலவும் கட்சிப் பிரச்னை குறித்து கூறினேன். சமீபகாலமாக கட்சியின் சார்பிலும், அரசு நிகழ்ச்சியிலும் என்னை ஏன் காண முடியவில்லை என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக எனது குடும்பத்தை விட, தொகுதி மக்களுடன்தான் அதிக நேரம் செலவிட்டு வந்துள்ளேன்.

இந்த விஷயத்தில் எனது எதிரிகள் கூட இதற்கு மாறான கருத்தைக் கூறி என்னை இழிவுபடுத்த முடியாது. நான் கட்சித் தலைமையை அணுகி, இதுகுறித்து பேச நினைத்தேன். ஆனால் அது பயனில்லாமல் போனது. என்னால் மக்களுக்கு பணியாற்ற முடியாவிட்டால் பதவியில் தொடர்வதால் என்ன பயன்? நான் அமித்ஷாவை சந்திப்பதற்கான வாய்ப்புகள் எப்போதும் உள்ளன; ஆனால், அதற்கான சாத்தியம் இப்போது இல்லை’ என்றார்.

Related Stories:

>