தண்டையார்பேட்டை நேரு நகர், கொடுங்கையூர் எழில் நகரில் கிடப்பில் ரயில்வே மேம்பால பணி: நெரிசலில் திணறும் பொதுமக்கள்

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை எண்ணூர் நெடுஞ்சாலையில் நேரு நகர் மற்றும் கொடுங்கையூர் எழில் நகர் ஆகிய பகுதிகளில் ரயில்வே கேட் அமைந்துள்ளன. இந்த ரயில்வே கேட்கள் அடிக்கடி மூடப்படுவதால், சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசைக்கு அணிவகுத்து நிற்கின்றன. குறிப்பாக, காலை, மாலை நேரங்களில் இப்பகுதிகளில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. இதனால், அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, மேற்கண்ட இரண்டு ரயில்வே கேட் பகுதியிலும் மேம்பாலம் அமைக்க வேண்டும், என பொதுமக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கண்ட இரு பகுதியிலும் ரயில்வே மேம்பாலம் அமைக்க அரசு முடிவு செய்தது.இதற்காக, முதற்கட்டமாக மண் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், அடுத்தக்கட்ட பணிகள் மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் தினசரி போக்குவரத்து நெரிசலில் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, இந்த வழித்தடத்தில் சரக்கு ரயில் செல்லும்போது, கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை உள்ளது.

தண்டையார்பேட்டை பகுதியில் இருந்து வியாசர்பாடி, கொடுங்கையூர், மூலக்கடை, செங்குன்றம், ஆவடி உள்ளிட்ட இடங்களுக்கு இந்த ரயில்வே கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும். அதேபோல், கொடுங்கையூரில் இருந்து தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர், கொருக்குப்பேட்டை, தங்கசாலைக்கு செல்லும் வாகனங்களும் இந்த ரயில்வே கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும்.  இவ்வழியாக, தினசரி இயக்கப்படும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், இந்த ரயில் கேட் மூடப்படும் நேரங்களில் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே, தமிழக அரசு இந்த மேம்பால பணிகளை தொடங்கி, விரைந்து முடிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.  இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இந்த 2 ரயில்வே கேட் பகுதிகளும் ஆர்கே நகர் தொகுதிக்கு உட்பட்டது. இந்த தொகுதி எம்எல்ஏவாக டிடிவி தினகரன் உள்ளதால், அரசு இந்த தொகுதிக்கு எந்த வளர்ச்சி பணிகளையும் சரிவர செய்வதில்லை.  டிடிவி தினகரனும் வெற்றி பெற்றதோடு சரி. தொகுதி மக்களின் குறைகளை கேட்க வருவதே இல்லை. அரசியல் பகைகளை மறந்து, பொதுமக்கள் நலன் கருதி, இந்த ரயில்வே மேம்பால பணிகளை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories:

More
>