×

பட்ஜெட்டுக்கு பின் ரயில்கள் முழுமையாக இயக்கம்? ஏற்பாடுகளை செய்யும் ரயில்வே நிர்வாகம்

சேலம்: மத்திய அரசின் பட்ஜெட்டிற்கு பிறகு ரயில்களை முழுமையாக இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மண்டலங்கள் வாரியாக செய்து வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க, கடந்த ஆண்டு மார்ச் 24ம் தேதி, முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், பயணிகள் ரயில் சேவையை அடியோடு ரயில்வே நிர்வாகம் நிறுத்தி வைத்தது. 3 மாத காலத்திற்கு பின், ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, முதலில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு கொண்டு சேர்க்க ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. பின்னர், குறிப்பிட்ட நகரங்களுக்கிடையே சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. தற்போது நாடு முழுவதும் அனைத்து முக்கிய நகரங்களையும் இணைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள், பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த ரயில்கள் அனைத்தும், முன்பதிவு ரயில்களாகவே இயக்கப்படுகிறது. சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி, பயணிகள் முகக்கவசம் அணிந்தும், காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டும் செல்கின்றனர். ஏழை, நடுத்தர மக்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் பாசஞ்சர் ரயில்கள் மற்றும் முன்பதிவில்லா பெட்டிகளை இன்னும் பயன்பாட்டிற்கு கொண்டு வராததால், பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர். இந்நிலையில், கொரோனா நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. முதலில் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் நிலையில், அடுத்தடுத்து அனைத்து தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி வழங்கவுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளனர். இதனால், பழைய இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பி வருகின்றனர். அதனால், ரயில்கள் இயக்கத்தையும் முழுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மத்திய அரசின் பட்ஜெட், அடுத்த மாதம் (பிப்ரவரி) 1ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட் தாக்கலுக்கு பின், ரயில்கள் இயக்கத்தை முழுமையாக கொண்டு வர ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக ஒவ்வொரு ரயில்வே மண்டலத்திலும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில்களை சுத்தப்படுத்தி, இயக்கத்திற்கு தயாராக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்து விட்டது. ஊரடங்கு தளர்வால், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். அதனால், ரயில் போக்குவரத்தையும் சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிப்ரவரியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின், பழைய படி ரயில்கள் இயக்கம் முழுமையாக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். அதற்கான பணிகளை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது,’’ என்றனர்.

Tags : Railway administration , Are trains fully operational after the budget? Railway administration making arrangements
× RELATED காத்திருப்போர் பட்டியலில் ரத்தான...