எம்ஜிஆரின் 104வது பிறந்தநாளில் சட்டமன்ற தேர்தல் வெற்றிக்காக களப்பணியாற்ற சபதம் ஏற்போம்: அதிமுக தொண்டர்களுக்கு இபிஎஸ், ஓபிஎஸ் கடிதம்

சென்னை: எம்ஜிஆரின் 104வது பிறந்தநாளில், சட்டமன்ற தேர்தலில் வெற்றிக்காக கடுமையாக களப்பணி ஆற்ற சபதம் ஏற்போம் என்று அதிமுக தொண்டர்களுக்கு இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக தொண்டர்களுக்கு நேற்று எழுதியுள்ள கடிதம்: அதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா, உலகில் தமிழர்கள் வாழும் இடமெல்லாம் மகிழ்ச்சியோடு கொண்டாடப்படும் மகத்தான திருவிழா. திரை உலகில் தனக்கென ஒரு தனி வழியை அமைத்துக்கொண்டு, அதன்மூலம் மாபெரும் ரசிகர் பட்டாளத்தை சொந்தமாக்கிக்கொண்ட எம்ஜிஆர், தனது உழைப்பும், புகழும் மக்களுக்கு நல்ல கருத்துகளையும், அறநெறிகளையும் கொண்டு சேர்க்கும் வலுவான ஆயுதங்களாக பயன்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.  

திரைப்படங்களின் மூலம், குறிப்பாக பாடல்களின் மூலம், புரட்சிகரமான சிந்தனைகளையும், சமூக சீர்திருத்த கருத்துகளையும் எடுத்துச் சொன்னதில் எம்ஜிஆருக்கு நிகராக இன்னொரு மனிதரை உலகில் வேறு எங்கும் காண முடியாது.

எம்ஜிஆர் அதிமுகவுக்கும், தமிழகத்திற்கும் வழங்கிய மாபெரும் கொடையாக வந்தவர் ஜெயலலிதா. அந்த இருபெரும் தலைவர்கள் வழியில் இன்றும், இனிவரும் காலங்களிலும் அதிமுக வெற்றிநடைபோடும் என்பதில் நாம் பெருமை கொள்கிறோம். அதிமுகவின் பயணத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் என்னும் ஜனநாயக போர்க்களத்தை சந்திக்க போகிறோம். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் நடத்திய, இன்று நாமும் நடத்திக் கொண்டிருக்கக்கூடிய நல்லாட்சி தொடர்ந்திட எம்ஜிஆரின் 104வது பிறந்த நாளில், வெற்றிநடை போடும் தமிழகத்தை காத்திட, நாம் அனைவரும் சபதம் ஏற்போம், கடுமையாக களப்பணி ஆற்றுவோம், வெற்றி காண்போம். இவ்வாறு கூறியுள்ளனர்.

Related Stories:

>