×

பொங்கல் விடுமுறை நாளில் சென்னை மெட்ரோ ரயிலில் 55 ஆயிரம் பேர் பயணம்: அதிகாரி தகவல்

சென்னை: கொரோனா ஊரடங்கிற்கு முன்பாக தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற விழா  நாட்களில் மெட்ரோ ரயிலில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்வார்கள்.  கோயம்பேடு, கிண்டி, சென்ட்ரல், எழும்பூர் போன்ற இடங்களுக்கு செல்பவர்கள்  மெட்ரோ ரயில் சேவையை அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். ஆனால், கொரோனா பரவலுக்கு பிறகு மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறைந்தே காணப்பட்டது. நாள் தோறும் 15 ஆயிரம் பேர் வரை மட்டுமே மெட்ரோவில் பயணம் செய்து வந்தனர். இந்தநிலையில், சனி, ஞாயிறு மற்றும் அரசு பொதுவிடுமுறை நாட்களில் 50 சதவீத கட்டண தள்ளுபடி அளித்ததன் மூலமாகவும் மெட்ரோவில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வந்தது. அந்தவகையில், நாள் தோறும் மெட்ரோ ரயில் சேவையை நாள் தோறும் 35 ஆயிரம் பேர் வரை பயன்படுத்தி வந்தனர். தற்போது, பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையை தினசரி 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தியுள்ளதாக மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு பிறகு சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. 20 முதல் 50 சதவீதம் வரையிலான கட்டண தள்ளுபடி காரணமாக விடுமுறை நாட்களில் அதிகமானோர் சேவையை பயன்படுத்துகின்றனர். மேலும், 90 செ.மீ உயரம் வரையிலான குழந்தைகளுக்கு இலவச பயணம் என்ற அறிவிப்புக்கு பிறகு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வரத்தொடங்கியுள்ளனர். பொங்கல் விடுமுறை நாட்களில் மட்டும் தினசரி 50 ஆயிரம் முதல் 55 ஆயிரம் பேர் வரை மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர். இனி வரும் நாட்களில் இது அதிகமாகும். பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக ரயில் இயக்கும் நேரத்தை நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும். இவ்வாறு கூறினார்.  



Tags : passengers ,train ,holiday ,Chennai Metro ,Pongal , 55,000 people travel on Chennai Metro train on Pongal holiday: official information
× RELATED செங்கல்பட்டு புறவழிச்சாலையில் லாரி...