×

சட்டமன்ற தேர்தல் எதிரொலி அதிமுக-பாமக கூட்டணி உறுதியாகுமா? ராமதாஸ்-அமைச்சர்கள் 20ம் தேதி மீண்டும் சந்திப்பு

சென்னை: அதிமுக-பாமக கூட்டணியை உறுதிப்படுத்தும் முயற்சியாக ராமதாசுடன் வரும் 20ம் தேதி அமைச்சர்கள் மீண்டும் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் அதிமுக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில், தொகுதி பங்கீடு குறித்து பாமகவுடன் பேசி கூட்டணியை உறுதிப்படுத்த வேண்டும் என்று அதிமுகவினர் விரும்புகின்றனர். ஆனால் வன்னியர்களுக்கு 20 சதவீத உள்ஒதுக்கீடு கேட்டு போராடி வரும் பாமக அந்த கோரிக்கையை ஏற்க வேண்டும் என்று பிடிவாதமாக உள்ளது.இதனால் கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் கூட்டணி தொடர்பாக பேசுவதற்காக கடந்த வாரம் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் பாமக நிறுவனர் ராமதாசை தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு 1 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. அப்போது கூட்டணி தொடர்பாக பேசியபோது முதலில் வன்னியர்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் தீர்வு காண வேண்டும். அதன் பிறகு கூட்டணி பற்றி பேசலாம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தை குறித்து ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில்: அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இருவரும் தைலாபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினார்கள். வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக பேசப்பட்டது. பொங்கல் திருநாளுக்கு பிறகு மீண்டும் இது குறித்து பேசுவதாக உறுதியளித்துள்ளார்கள். அமைச்சர்களுடன் வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து மட்டும் தான் பேசப்பட்டது. அரசியலோ, தேர்தல் குறித்தோ பேசப்படவில்லை. வன்னியர் இட ஒதுக்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன் என்று டிவிட்டரில் கூறியிருந்தார். இந்நிலையில் பொங்கலுக்கு பிறகு கூட்டணி குறித்து பேசப்படும் என்று கூறியிருந்த நிலையில் அமைச்சர்கள் மீண்டும் வரும் 20ம் தேதி பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்போது வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு என்ன முடிவுகள் எடுத்துள்ளது என்பது குறித்து தெரிவிக்கப்படும். அதைப்பொறுத்தே அடுத்த கட்ட பேச்சுவார்த்தை அமையும் என்றும், அதிமுக-பாமக கூட்டணி உடன்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது தெரியவரும் என்று கூறுகின்றனர்.



Tags : AIADMK ,alliance ,elections ,BJP ,Assembly ,Ramadas-Ministers , Will the AIADMK-BJP alliance be confirmed in the aftermath of the Assembly elections? Ramadas-Ministers meet again on the 20th
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...