மெரினா கடற்கரையில் பலத்த பாதுகாப்பு: கட்டுப்பாடுகளால் களையிழந்த காணும் பொங்கல்: போலீசார், பொதுமக்களை எச்சரித்து அனுப்பினர்

சென்னை: மெரினா கடற்கரை உட்பட பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் மெரினாவில் மக்கள் இல்லாததால் நேற்று காணும் பொங்கல் களையிழந்து காணப்பட்டது. அதையும் மீறி வந்த பொதுமக்களை போலீசார் எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பினர். கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. புத்தாண்டு அன்று மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. மெரினா கடற்கரையில் அதிக கூட்டம் கூடும் என்பதாலும், அதன் மூலம் கொரோனா பரவல் அதிகரித்துவிடும் என்பதாலும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கூடுவார்கள். அவர்கள் கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வருவது வழக்கம். புறநகர் பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் மாட்டு வண்டிகளிலும் மெரினா கடற்கரைக்கு வருவார்கள்.

அப்போது அதிக அளவில் கூட்டம் இருக்கும் என்பதால் மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்தை நிறுத்தியும், காணும் பொங்கலை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்படும். குடும்பத்தினருடன் வரும் சிறுவர்கள் கால்பந்து, கபடி, மணலில் வீடு கட்டுவது, கடல் அலையில் கால் நனைப்பது உள்ளிட்ட விளையாட்டுகளிலும் ஈடுபட்டு மகிழ்வார்கள். மேலும் பொதுமக்கள் கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்படும். அதையும் மீறி கடலுக்குள் இறங்காமல் இருக்கும் வகையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, 10க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம் ஆகும். அதனால் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். ஆனால் இந்த ஆண்டு புத்தாண்டுக்கு மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டது. அதைப்போன்று காணும் பொங்கலான நேற்று மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மெரினா கடற்கரை பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கடற்கரைக்கு வந்த பொதுமக்களை எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பி வைத்தனர். அதனால் நேற்று மெரினா கடற்கரை எப்போதும் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. அதைப்போன்று பட்டினப்பாக்கம், நீலாங்கரை, கோவளம், வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா போன்ற பகுதிகளில் மக்கள் யாரும் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் இந்த ஆண்டு காணும் பொங்கல் களையிழந்து காணப்பட்டது. இந்த இடங்களில் எல்லாம் சிறு கடைகள் போடப்பட்டு பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடைபெறும். இந்த விற்பனையும் நடைபெறாததால், வியாபாரிகளும் கஷ்டப்பட்டனர்.

அனுமதி இல்லாததால் மக்கள் விரக்தி

கொரோனா பரவலை தடுக்க மக்கள் ஒரே இடத்தில் கூட கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. குறிப்பாக, பொதுமக்கள் அதிகளவில் கூடும் மாமல்லபுரம் கடற்கரை கோயில், வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு மக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.  இதை அறியாமல் வந்த பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்து திரும்பினர். இதனால் அந்தந்த சுற்றுலா பகுதிகளில் கடை மற்றும் உணவகம் வைத்துள்ள வியாபாரிகள் வருமானத்தை இழந்து  பெரிதும் அவதிப்பட்டனர்.

Related Stories:

>