கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 100 தடுப்பூசிகள் இருந்தும் 35 பேர் மட்டுமே பதிவு: முதல் நாளிலேயே இணைய சிக்கல் : பதிவு தாமதத்தால் போடும் பணிமந்தம்

சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 100 தடுப்பூசிகள் தயராக இருந்த நிலையில் 35 பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். மேலும் கால தாமதமாக தொடங்கியது மற்றும் கோவின் செயலியில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக நேற்று தடுப்பூசி வழங்கும் பணி தாமதமானது. இது வரும் நாட்களில் சரி செய்யப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் நேற்று 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி அளிக்கும் பணி தொடங்கியது. ஒரு மையத்தில் தினசரி 100 பேருக்கு தடுப்பூசி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் தடுப்பூசி 3ம் கட்ட ஆய்வில் இருப்பதால் சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி போடுவதில் தயக்கம் காட்டினர். இணையதளத்தில் பதிவு செய்வதிலும் கோளாறுகள் ஏற்பட்டது. இதனால் பதிவு செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை.

மேலும் சென்னை கீழப்பாக்கம் மருத்துவமனையில் 100 தடுப்பூசிகள் தயராக இருந்த நிலையில் 35 பேர் மட்டுமே பதிவு செய்திருந்தனர். இதைப்போன்று சென்னையில் பழவேற்காடு போன்ற பல்வேறு தடுப்பூசி மையங்களில் பதிவு செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் வராததால் வெறிச்சோடியே காணப்பட்டது. அதன்படி சென்னையில் 12 மையங்களில் 1200 பேருக்கு 310 பேரும், காஞ்சிபுரத்தில் 3 மையங்களில் 32 பேரும், செங்கல்பட்டில் 3 மையங்களில் 55 பேர் மட்டுமே போட்டுள்ளனர். இதனால் முதல் நாளான நேற்று கொரோனா தடுப்பூசி போடுவதற்கு குறைவான நபர்களே வந்ததால் தடுப்பூசி வழங்கும் பணி தாமதமானது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது: தினசரி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் முதல் நாளான நேற்று காலை 11.30 மணிக்கு தான் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது.

இதைத் தவிர்த்து சில மாவட்டங்களில் ஏற்பட்ட இணையதள கோளாறு காரணமாக கோவின் செயலியில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் தான் ஒரு சில இடங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முதல் நாள் என்பதால் இந்த சவால்கள் எல்லாம் இருக்கத்தான் செய்யும். வரும் நாட்களில் இதுபோன்று பிரச்னைகள் இல்லாமல் சரி செய்யப்படும். மேலும் தடுப்பூசி போடுவது முதல் நாள் என்பதால் இந்த தாமதம் ஆகியுள்ளது. அதுவும் சரி செய்யப்படும். அனைத்து மையங்களிலும் தினசரி 100 பேருக்கு தடுப்பூசி அளிக்க முடிவு செய்யப்பட்டது.

ஒரு சில மையங்களில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் குறைவாக உள்ளது. வரும் நாட்களில் இதுவும் சரி செய்யப்படும். மேலும் நேற்று தமிழகம் முழுவதும் 16 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி அளிக்கப்படும் நிலையில் 2,783 பேருக்கு மட்டுமே போடப்பட்டுள்ளது.இனிவரும் நாட்களில் அதிகமான நபர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>