×

தமிழகம் முழுவதும் 166 முகாம்களில் 5.36 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி: வீடியோ கான்பரன்ஸ் மூலம் நாடு முழுவதும் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி; மதுரை நிகழ்ச்சியில் பங்கேற்றார் முதல்வர் எடப்பாடி

மதுரை: கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் நாடு முழுவதும் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் 166 முகாம்களில் நேற்று காலை தடுப்பூசி போடும் பணிகள் துவங்கியது. மதுரை அரசு மருத்துவமனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தை துவக்கி வைத்தார். முதல்கட்டமாக 5.36 லட்சம் பேருக்கு அளிக்கப்படவுள்ளது. இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதியளித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த 2 தடுப்பூசிகளும் கடந்த வாரம் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. தமிழகத்திற்கு 5.36 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மற்றும் 20 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி கடந்த வாரம் வந்தது. அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த தடுப்பூசி பிரித்து அனுப்பப்பட்டது. உரிய வெப்பநிலையில் இந்த தடுப்பூசிகள் அனைத்தும் சேமிப்பு கிடங்குகிகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை நேற்று காலை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் துவக்கி வைத்தார். தமிழகத்தில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையத்தில் இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணியை துவக்கி வைத்தார். முதல்வர் முன்னிலையில் அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் செந்தில், மதுரை மாவட்ட தலைவர் அழகு வெங்கடேஷ், பல்நோக்கு மருத்துவ பணியாளர் முத்துமாரி உட்பட 10 பேர் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டீன் சங்குமணி ஆகியோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள 166 மையங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான 6 லட்சம் சுகாதாரப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், 4.50 லட்சம் பேர், இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு படிப்படியாக தடுப்பூசி வழங்கப்படும்.

சென்னையில் ராஜிவ்காந்தி, ஓமந்தூரார், கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி, ராயப்பேட்டை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை ஆகிய அரசு மருத்துவமனைகளிலும் மாநகராட்சிக்கு உட்பட்ட போரூர், ஈஞ்சம்பாக்கம், மாதவரம் ஆகிய இடங்களில் உள்ள நகர்புற சமுதாய நல மையங்களில் தடுப்பூசி, அப்பல்லோ மற்றும் எம்ஜிஎம் மருத்துவமனையிலும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. ஈஞ்சம்பாக்கம் மாநகராட்சி மையத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார். இதில் இணை ஆணையர் திவ்யதர்ஷினி, மாநகர நல அலுவலர் ஜெகதீசன், மருத்துவ அலுவலர் ஹேமலதா ஆகியோர் கலந்து கொண்டனர். சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் மண்டல மருத்துவ அலுவலர்கள், சுகாதார மையங்களில் பணியாற்றும் அனைத்து பணியாளர்கள், ஆய்வகங்களில் பணியாற்றும் பணியாளர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மலேரியா மற்றும் என்யூஎல்எம் பணியாளர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்படுகிறது.

அடுத்த சில நாட்களில் மையங்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 2,850 இடங்களில் இந்த தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளன. தடுப்பூசி மையத்திற்கு வருபவர்களின் ஆவணங்களை ஆய்வு செய்து தடுப்பூசி அளித்த பின்பு அவர்களின் உடல்நிலையை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளுக்காக ஒவ்வொரு மையத்திலும் 5 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்க ஒரு மருத்துவர் மற்றும் ஒரு பல்நோக்கு பணியாளர் நியமிக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளனர்.

ஒவ்வொரு மையத்திலும் தினசரி 100 பேருக்கு தடுப்பூசி போடப்படும்.தடுப்பூசி குறித்த சந்தேகங்களை அறிய, ‘1075’ என்ற இலவச உதவி எண் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தடுப்பூசி தொடர்பாக பொதுமக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக தமிழகத்தின் 10 தலை சிறந்த மருத்துவர்கள் நேற்று தடுப்பூசி போட்டு கொண்டனர். சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் தேரனிராஜன் கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

* உறுதிமொழி கேட்கும் அரசு
கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொள்ள உள்ளவர்கள் ஒரு உறுதி மொழி அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவாக்சின் எடுத்து கொள்ளும் அனைவருக்கும் படிவம் ஒன்று அளிக்கப்படுகிறது. அதில் கோவாக்சின் தடுப்பு மருந்து இன்னும் பரிசோதனையில் உள்ளன என்பதை நான் அறிவேன். கொரோனாவுக்கு எதிராக பாதுகாப்பு தரும் என ஆய்வு முடிவுகள் வரவில்லை என தெரிந்து தான் தடுப்பூசி எடுத்துக் கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது. இதில் கையெழுத்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Corona ,Edappadi ,camps ,Tamil Nadu ,Modi ,video conference ,Madurai , Corona vaccine for 5.36 lakh people in 166 camps across Tamil Nadu: PM Modi launches video conference across the country
× RELATED கச்சா எண்ணெய் விலை குறைந்தும்...