இந்தியாவில் வழங்கப்படும் 2 தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ‘இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ள இரு தடுப்பூசிகளும் பாதுகாப்பானவைதான். அவற்றை பற்றிய பொய் பிரசாரம், வதந்திகளை நம்ப வேண்டாம்,’ என நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம், அஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனம் தயாரித்த ‘கோவிஷீல்டு’ மற்றும் ஐதராபாத்தின் பாரத் பயோடெக்-இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தயாரித்த ‘கோவாக்சின்’ ஆகிய இரு தடுப்பூசிகளை இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி தந்தது. இதில், கோவிஷீல்டு மருந்தை புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து விநியோகம் செய்கிறது. அந்த வகையில், ‘மேட் இன் இந்தியா’ தயாரிப்பான இரு கொரோனா தடுப்பூசிகளை போடும் பணியை பிரதமர் மோடி நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார்.

‘எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாகட்டும், எல்லோரும் ஆரோக்கியம் பெறட்டும்’ என்ற வரிகளை கொண்ட சமஸ்கிருத ஸ்லோகம் ஒலிக்க, பிரதமர் மோடி பட்டனை அழுத்தி, முதற்கட்டமாக 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார்.இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது: உலகில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் மொத்த மக்கள் தொகை 3 கோடிக்கும் குறைவாக இருக்கும் நிலையில், இந்தியாவில் முதற்கட்டமாக மட்டுமே 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. அடுத்த கட்டமாக 30 கோடி பேர் தடுப்பூசி பெற உள்ளனர். இந்தியாவை தவிர்த்து அமெரிக்கா, சீனாவில் மட்டுமே 30 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ளது. அந்த வகையில் உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை நாம் தொடங்கி உள்ளோம். கொரோனா தடுப்பூசியை பொறுத்த வரையில் 2 டோஸ்கள் போட்டுக் கொள்வது மிகவும் அவசியமானது.

 எனவே, ஒரு டோசை போட்டுக் கொண்டு, இன்னொன்றை போட்டுக் கொள்ள மறந்து விடும் தவறை மட்டும் செய்து விடாதீர்கள். நிபுணர்கள் கூறியபடி, ஒரு மாத இடைவெளிக்குள் 2வது டோஸ் போட்டுக் கொள்ள வேண்டும். அதே போல், 2வது டோஸ் எடுத்துக் கொண்ட 2 வாரத்திற்கு பிறகு மட்டுமே வைரசுக்கு எதிர்த்து போராட தேவையான நோய் எதிர்ப்பு சக்தி உடலில் மேம்பட ஆரம்பிக்கும். எனவே, தடுப்பூசி போட்ட பிறகும் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதலை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

நமது மருத்துவ விஞ்ஞானிகளும், நிபுணர்களும் தரத்தையும், செயல் திறனையும் உறுதிபடுத்திய பிறகே இரு மேட் இன் இந்தியா கொரோனா தடுப்பூசிகளுக்கும் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இரு தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை. எனவே, இது பற்றிய பொய் பிரசாரங்கள், வதந்திகள் பற்றி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பிற வெளிநாட்டு தடுப்பூசிகளுடன் ஒப்பிடுகையில், இந்திய தடுப்பூசிகள் மலிவானவை, பயன்படுத்த எளிதானவை.

வெளிநாடுகளில் ஒரு டோஸ் மருந்தின் விலை ரூ.5,000 ஆகவும், அவற்றை 70 டிகிரி செல்சியஸ் குளிரில் சேமித்து வைக்கவும் வேண்டும். ஆனால், இந்திய தடுப்பூசிகள், வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு இணையான தரத்துடன் சேமிப்பதில் இருந்து விநியோகிப்பது வரை இந்திய சூழலுக்கு ஏற்ற மாதிரியானவை. இந்த தடுப்பூசிகள் கொரோனாவுக்கு எதிராக இந்தியாவின் தீர்க்கமான வெற்றியை உறுதிப்படுத்தும். நமது தடுப்பூசி இயக்கம், மனிதாபிமான அடிப்படையில், வைரசுக்கு எதிராக அதிக பாதிப்பை எதிர்கொள்பவர்களுக்கு முன்னுரிமை அளித்து வழங்கப்படுகிறது. இது பெருமைமிகு நாள். நமது விஞ்ஞானிகளின் வலிமை மற்றும் நமது மருத்துவ சகோதரர்கள், நர்சிங் ஊழியர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்களின் கடின உழைப்பை கொண்டாடும் நாள்.கொரோனா பாதிப்பு ஆரம்ப கட்டத்திலிருந்து மக்கள் மிகுந்த பொறுமை காத்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு தந்தனர். அதே பொறுமை தடுப்பூசி பெறுவதிலும் இருத்தல் வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தடுப்பூசி பெற்ற முதல் எம்பி

பாஜ மூத்த தலைவரும், கவுதம் புத்தா நகர் எம்பி.யுமான மகேஷ் சர்மா (வயது 61), டெல்லி அடுத்த நொய்டா செக்டார் 27 பகுதியில் உள்ள கைலாஷ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இவர் பயிற்சி பெற்ற எம்பிபிஎஸ் டாக்டர் என்பதால், சுகாதாரப் பணியாளர் பட்டியலில் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். அதே சமயம், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட முதல் எம்பி.யும் இவராவார். முன்களப் பணியாளர்கள் பட்டியலில் அரசியல் தலைவர்கள் இடம் பெற மாட்டார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். எனவே, எந்த அரசியல் தலைவர்களும் இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை.

உணர்ச்சிவசப்பட்ட பிரதமர் மோடி

பிரதமர் மோடி தனது பேச்சில், கொரோனா தடுப்பு பணியில் சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்களின் தியாகத்தையும், பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றியும் குறிப்பிடும் போது உணர்ச்சிவசப்பட்டார். தழுதழுத்த குரலில் பேசிய அவர், ‘‘கொரோனா வைரஸ் குடும்ப உறுப்பினர்களை தனிமைப்படுத்தியது. நோய் வாய்ப்பட்ட பல குழந்தைகள் துயரத்தில் அழுத போது, தாய்மார்கள் விலகி இருக்க வேண்டியதாகி விட்டது. அதைத் தவிர அவர்களால் வேறெதுவும் செய்ய முடியவில்லை. வயதானவர்கள் தனிமையில் போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காலமான பலருக்கு முறைப்படி இறுதி சடங்குகள் கூட செய்ய முடியவில்லை. நெருக்கடி மற்றும் நம்பிக்கையற்ற நேரத்தில் முன்களப் பணியாளர் நம்பிக்கையை தூண்டினர். தங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து, கடமைகளுக்கு அவர்கள் முன்னுரிமை தந்தனர். அப்படிப்பட்ட தியாகம் செய்தவர்களில் பலர் திரும்பி வரவில்லை. பிறர் உயிரை காப்பாற்ற அவர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்தனர்,’’ என்றார்.

Related Stories:

>