தவறான சுவரொட்டிகள், பெண்களை அவமானப்படுத்தியவர் மீது பெண் வன்கொடுமை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கமிஷனரிடம் திமுக வழக்கறிஞர்கள் புகார்

சென்னை: தவறாக சுவரொட்டிகள் ஒட்டியவர்கள் மீது பெண்கள் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ்  நடவடிக்கை எடுக்கக் கோரி கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி  காவல்துறை ஆணையருக்கு அனுப்பிய புகார் கடிதத்தை திமுக தலைமைக் கழக வழக்கறிஞர்கள் போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து அளித்தனர். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி காவல்துறை ஆணையருக்கு அனுப்பிய புகார் கடிதத்தை திமுக தலைமைக் கழக வழக்கறிஞர்கள் முத்துக்குமார் மற்றும் கே.ஜே.சரவணன் ஆகியோர் காவல்துறை ஆணையரிடம் நேற்று வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடிதம் வழங்கினர்.

அதில் கூறியிருப்பதாவது: திமுக இளைஞர் அணி செயலாளராக பொறுப்பு வகித்து வரும் உதயநிதி ஸ்டாலின், 2021-தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் கிராமம் முதல் மாநகரம் வரையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.  இந்நிலையில் கடந்த 14ம் தேதி  அதிமுக கட்சி   வண்ணத்தில் “தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டக் கழகம்” என்ற பெயரில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அரசியலுக்கே தொடர்பில்லாத அவரது குடும்ப பெண் உறுப்பினர்களின் படங்களை கொண்ட சுவரொட்டிகள் அச்சிட்டு, சென்னை மாநகரில் பல்வேறு இடங்களில் ஒட்டியுள்ளனர். அரசியல் ரீதியான விமர்சனங்களை தவிர்த்து - அரசியலுக்கு அப்பாற்பட்டு, அரசியலுக்கு தொடர்பே இல்லாத குடும்ப பெண் உறுப்பினர்களை கேலியாகவும் - அவதூறாகவும் - தரக்குறைவாகவும் குறிப்பிட்டு, அவர்கள் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.  

மேலும், அரசியல் ரீதியாக எந்த விமர்சனங்களையும், எங்கள் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எதிர்கொள்ள தயாராக உள்ளார். ஆனால், அதனை விடுத்து, அரசியலுக்கு அப்பாற்றபட்ட, சமூகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்கள்மீதும் பெரும் பற்று கொண்ட குடும்ப பெண் உறுப்பினர்களை கேலியாகவும் - அவதூறாகவும் - தரக்குறைவாகவும் பேசி, அவரது குடும்ப பெண் உறுப்பினர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் விதத்தில் பேசியும் - சுவரொட்டிகள்  ஒட்டியும் வருவது, பெண்கள் வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் ஆவார். எனவே, அதிமுக கட்சியின்  நிர்வாகிகள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த நபர்கள்மீது ‘பெண்கள் வன்கொடுமைச் சட்டம்’ மற்றும் ‘இந்திய அச்சகச் சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>