×

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் மீன் வாங்குவதற்கு குவிந்த மக்கள்: விலை உயர்வு

அறந்தாங்கி: பொங்கல் தினத்தை முன்னிட்டு கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் மீன் வாங்க பல வெளியூர்களில் இருந்து பொதுமக்கள் வருகை தந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.மேலும் மீன்களின் விலையும் உயர்ந்தது. புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே கட்டுமாவடியில் பெரிய மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு மட்டும் சுமார் 15க்கும் மேற்பட்ட மீன் ஏலக்கடைகள், இறால் கம்பெனிகள் செயல்படுகின்றன. இங்கு கட்டுமாவடி, மணமேல்குடி, பொன்னகரம், புதுக்குடி, சேதுபாவாசத்திரம், மந்திரிப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் பிடிக்கும் மீன்களும் ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள விசைப்படகு மீனவர்கள் பிடிக்கும் மீன்களும் இங்கு விற்பனைக்கு வருகிறது.

அதுமட்டுமில்லாமல் ராமநாதபுரம், பாம்பன், ராமேஸ்வரம், தூத்துக்குடி, காரைக்கால், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளிலிருந்து சரக்கு வாகனங்கள் மூலம் தினமும் மீன்கள் விற்பனைக்கு வருகிறது. இந்த மீன்களை வாங்குவதற்காக மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் சரக்கு வாகனங்களில் தினமும் வந்து செல்கின்றனர். ஞாயிறு, செவ்வாய், வியாழன் போன்ற நாட்களில் விசைப்படகு மீனவர்கள் கரை திரும்புவதால் மீன் வரத்து அதிகமாக இருக்கும். இந்நிலையில் மாட்டுப்பொங்கலன்று ஆடு, மாடு இல்லாதவர்கள் அசைவ உணவை விரும்புகின்றனர். மாட்டுப்பொங்கல் கொண்டாடுபவர்கள் அதற்கு அடுத்த தினம் அசைவ உணவு சாப்பிடுவார்கள். இதனால் மாட்டுப் பொங்கல் தினத்தன்று கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் தமிழகத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த அதிகமான மக்கள் மீன்களை வாங்குவதற்காகவே வருகை தந்தனர்.

மேலும் சென்னை, கோவை, திருப்பூர் போன்ற பெருநகரங்களில் தொழில் செய்யக் கூடியவர்கள் பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊர் வருகை தந்துள்ளனர். இவர்கள்ஆடு, கோழி போன்ற இறைச்சி உணவுகளை எப்போது வேண்டுமானாலும் விரும்பி சாப்பிடலாம். ஆனால் உயிர் மீன் கட்டுமாவடியில் மட்டுமே கிடைக்கிறது. மீன்களை வாங்குவதற்காக பல பகுதிகளிலிருந்து அதிகமான மக்கள் வருகை தந்ததால் மீன் மார்க்கெட் மற்றும் அறந்தாங்கி சாலையில் கடும் நெரிசலும் ஏற்பட்டது. இதனால் அறந்தாங்கி செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் தாமதமாகவே நகர்ந்து சென்றது. காலை 6 மணி முதல் 10 மணி வரை மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் மீன் விலையும் உயர்ந்து காணப்பட்டது. கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : fish market ,Kattumavadi ,cow festival , Cattle, fish market, price increase
× RELATED சென்னை நொச்சிக்குப்பம் மீன் அங்காடி ஜூன் 2வது வாரத்தில் திறப்பு!!