×

முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை பொங்கல் விழா

கூடலூர்: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில் நேற்று யானை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இதற்காக யானைகள் மாயாற்றில் குளிக்க வைக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டு வரிசையாக யானைகள் முகாமில் நிறுத்தப்பட்டன. தொடர்ந்து இங்குள்ள விநாயகர் கோயிலில் பூஜை நடத்தப்பட்டு யானைகளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து யானைகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் உணவுகளுடன் சிறப்பு உணவாக பொங்கல், கரும்பு, தேங்காய், வெல்லம், ஆகியவையும் வழங்கப்பட்டது. தற்போது பொங்கல் தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் முதுமலைக்கு வந்திருந்தனர். தெப்பக்காடு முகாமில் யானைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியை காணவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

வழக்கமாக யானைகள் முகாமில் உள்ள விநாயகர் கோயிலில் சிறிய யானைகள் மணியடித்து கோவிலை சுற்றி வந்து பூஜை செய்து மண்டியிட்டு வணங்குவது வழக்கம். இந்த நிகழ்ச்சி இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமானதாகும். ஆனால் இந்த முறை யானைகள் பூஜை எதுவும் நடைபெறாதது இங்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. கோயிலில் வனத்துறையினர் மாத்திரம் பூஜை செய்து பின்னர் யானைகளுக்கு தீபாராதனை காட்டி உணவுகளை வழங்கினர். ஏராளமான யானைகள் வரிசையில் நிற்க வைக்கப்பட்டு உணவு வழங்கும் நிகழ்ச்சியை காண்பது தங்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்ததாகவும் யானை பொங்கல் நிகழ்ச்சி தங்களுக்கு மகிழ்ச்சியை அளித்ததாகவும் சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.

Tags : Elephant Pongal Festival ,Mudumalai Tiger Reserve , Mudumalai, Tiger Reserve, Elephant Pongal
× RELATED நீலகிரி அருகே யானை தாக்கி விவசாயி பலி