×

திருவாரூர் அருகே அரசு பெண்கள் பள்ளி இடிந்து விழுந்தது: பெற்றோர் அதிர்ச்சி

திருவாரூர்: திருவாரூர் அருகே குடவாசல் அரசு பெண்கள் பள்ளி இடிந்து விழுந்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா அலுவலகம் எதிரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 6 முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 700 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த 2003ம் ஆண்டில் அதிமுக ஆட்சியின்போது நபார்டு திட்டத்தின் கீழ் 600 சதுர அடி பரப்பளவில் கீழ் தளம் மற்றும் மேல் தள கட்டிடம் கட்டப்பட்டது. அதிமுகவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் மூலம் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தின் கீழ்தளத்தில் கெமிஸ்ட்ரி லேப் மற்றும் மேல் தளத்தில் கணினி அறை ஆகியவை செயல்பட்டு வந்தன.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இந்த கட்டிடத்தில் மேல் பகுதி முழுவதும் இடிந்து தரைதளத்தில் விழுந்ததில் தரைதளத்தின் மேற்பகுதியும் சேதமடைந்தது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோர், சமூக ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில் இடிந்த பள்ளி கட்டிடத்தை முதன்மைக்கல்வி அலுவலர் ராமன், தாசில்தார் ராஜன்பாபு ஆகியோர் பார்வையிட்டு இது தொடர்பான அறிக்கையினை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கியுள்ளனர்.

வரும் 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு வகுப்புகள் துவங்கப்பட உள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது பெற்றோர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்துள்ள நிலையில் பள்ளி கட்டிடம் அனைத்தையும் ஆய்வு செய்த பின்னரே பள்ளிகளை திறக்க வேண்டும். பள்ளி கட்டிடம் மட்டுமன்றி கொரோனா தொற்று ஏற்படாமல் இருப்பதற்கு பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்த வேண்டும் என்பதுடன் கடந்த 10 மாத காலமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்து வந்ததால் கழிவறைகளையும் சுத்தம் செய்து தர வேண்டும் என்றும் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Government girls' school ,Thiruvarur ,Parents , Thiruvarur, Government Girls, School, collapsed, collapsed
× RELATED வாக்கு சாவடிகளுக்கு அனுப்புவதற்காக...