மஞ்சூர் அருகே பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு சாலையில் விழுந்த ராட்சத பாறைகள்: போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதி

மஞ்சூர்: மஞ்சூர் அருகே நிலச்சரிவால் சாலையில் பாறைகள் விழுந்தன. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக  இரவு, பகலாக இடைவிடாமல் பெய்து வரும் பலத்த மழையால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மஞ்சூர் அருகே தமிழக-கேரளா எல்லையை ஒட்டியுள்ள கிண்ணக்கொரை பகுதியிலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையில் கிண்ணக்கொரை சாலையில் கேரிங்டன் ஜெயில் தோட்டம் பகுதியில் பெரிய அளவு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மரங்கள், மண் குவியலுடன், அங்கிருந்த ராட்சத பாறைகள் உருண்டு ரோட்டில் விழுந்தன.

 இதனால் மஞ்சூரில் இருந்து கிண்ணக்கொரை, இரியசீகை உள்பட எல்லையோர கிராமங்களுக்கான போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டது.

பொங்கல் பண்டிகை என்பதால் கிண்ணக்கொரை சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பலரும் பண்டிகை பொருட்கள் வாங்க மஞ்சூர் பகுதிக்கு சென்றிருந்தனர். நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் அவர்கள் மீண்டும் ஊர் திரும்ப முடியாமல் கடும் அவதிகுள்ளானார்கள்.

ஊட்டியில் இருந்து மஞ்சூர் வழியாக கிண்ணக்கொரை, இரியசீகை கிராமங்களுக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்கள் தாய்சோலை பகுதிவரை மட்டுமே இயக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான மக்களும் தாய்சோலை வரை சென்று அங்கிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவுள்ள கிண்ணக்கொரை மற்றும் கிராமங்களுக்கு நடந்தே சென்றனர்.

இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் விஸ்வநாதன், உதவி கோட்டப்பொறியாளர் சாமியப்பன் ஆகியோர் மேற்பார்வையில் உதவி பொறியாளர் பாலசந்திரன் மற்றும் சாலை ஆய்வாளர் நஞ்சூண்டன் சாலை பணியாளர்களுடன் விரைந்து சென்று சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.  ஊட்டியில் இருந்து ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு பாறைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் ராட்சத பாறைகள் ஆனதால் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்ற முடியவில்லை. இரவானதாலும் அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததாலும் சீரமைப்புபணிகள் நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று கம்ப்ரஸர் மூலம் பாறைகள் துளையிடப்பட்டு வெடிவைத்து தகர்க்கப்பட்டது. மேலும் ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு மரங்கள், மண் குவியல்களும் அப்புறப்படுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து பல மணிநேர இடைவெளிக்குபின் நேற்று மாலை 4 மணி முதல் மீண்டும் மஞ்சூர்-கிண்ணக்கொரை இடையே போக்குவரத்து துவங்கியது.

Related Stories:

>