பொள்ளாச்சி அடுத்த கோழிகமுத்தி யானை முகாமில் பொங்கல் விழா

ஆனைமலை: டாப்சிலிப் கோழிகமுத்தி யானை முகாமில் நேற்று பொங்கல் விழா நடந்தது. பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட டாப்சிலிப் (உலாந்தி)  வனச்சரகத்தில் உள்ள கோழிகமுத்தி வனத்துறை முகாமில், 28 வளர்ப்பு யானைகள்  பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள வளர்ப்பு யானைகளுக்கு, பயிற்சி  அளிக்கப்பட்டு, யானை சவாரி மற்றும் காட்டு யானைகளை விரட்டும் கும்கி  யானைகளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் மாட்டு பொங்கல்  அன்று டாப்சிலிப் பகுதியில், யானை பொங்கல் கொண்டாடுவது வழக்கம்.  இந்நிகழ்ச்சியை காண உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், மாநிலங்களில்  இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இந்த  ஆண்டு கோழிகமுத்தி யானைகள் முகாமில், நேற்று யானை பொங்கல் நிகழ்ச்சி  நடைபெற்றது.

அதிகாலையிலேயே அங்கு உள்ள யானைகளை பாகங்கள் குளிக்க வைத்து,  அலங்காரம் செய்து தடுப்புகள் முன்பு நிறுத்தி வைத்தனர். பின்னர், முகாமில்  உள்ள பழங்குடியின பெண்கள் பாரம்பரிய முறைப்படி, புதுப்பானையில் பொங்கல்  வைத்து, யானைகளுக்கு பிடித்த உணவான கருப்பு, வாழைப்பழம் உள்ளிட்ட உணவுகளை  தயார் செய்தனர். இதையடுத்து, ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர்  அன்வருதீன் முகாம் யானைகளுக்கு கரும்பு மற்றும் பொங்கலை வழங்கினார்.  நிகழ்ச்சியில் ஆனைமலை புலிகள் காப்பக உதவி வனப்பாதுகாவலர் பிரசாந்த்,  வனச்சரகர்கள் ஜெயச்சந்திரன், நவீன்குமார், புகழேந்தி உள்ளிட்ட வனத்துறை  ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

யானை பொங்கல் விழா நிகழ்ச்சிக்காக  டாப்சிலிப் வந்த சுற்றுலாப் பயணிகள், வனத்துறை வாகனங்கள் மூலம்  கோழிகமுத்திக்கு அழைத்து வரப்பட்டனர். யானை பொங்கல் நிகழ்ச்சியில், கலந்து  கொண்ட சுற்றுலாப்பயணிகள் அணிவகுத்து நின்ற யானைகளை கண்டு பிரமிப்பில்  ஆழ்ந்தனர். மேலும் யானைகளை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சி குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஆண்டுதோறும் வெகு  விமரிசையாக கொண்டாடப்படும் யானை பொங்கல் நிகழ்ச்சி, இந்த ஆண்டு கொரோனா நோய்  பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடந்தது. வழக்கமாக டாப்சிலிப்  பகுதியில் நடைபெறும் யானை பொங்கல், இந்த முறை கோழிகமுத்தி முகாமில்  நடத்தப்பட்டது. பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் டாப்சிலிப் வரை தங்களது  வாகனங்களில் வர அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் வனத்துறை வாகனங்கள் மூலம் விழா  நடைபெறும் முகாமுக்கு அழைத்து வரப்பட்டனர். கோழிகமுத்தியில், கும்கி  கலீம், கோவையில் பிடிக்கப்பட்ட சின்னத்தம்பி உள்ளிட்ட 21 யானைகளுக்கும்,  வரகளியார் பயிற்சி முகாமில், அரிசி ராஜா உள்ளிட்ட 7 யானைகளுக்கும் யானைக்கு  பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. மேலும் இந்த முறை, கொரோனா  அச்சத்தால், யானைகளுக்கு சுற்றுலாப்பயணிகள் உணவளிக்க தடை விதிக்கப்பட்டது,  என்று தெரிவித்தனர்.

Related Stories:

>