வேலூர் மாவட்டத்தில் மாட்டுப்பொங்கல் பண்டிகை கோலாகலம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு

வேலூர்: தை முதல்நாளான பொங்கல் திருநாளுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் உழவுக்கும், வாழ்வுக்கும் உறுதுணையான மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவற்றுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடுகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் நேற்று மாட்டுப்பொங்கல் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கிராம, நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில் வசிப்போர் தங்களது காளைகள், கறவை மாடுகளை குளிப்பாட்டி அவற்றின் கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, மஞ்சள், குங்குமம் இட்டு புதிய கயிறுகள் அணிவித்து மலர்களால் அலங்காரம் செய்தனர்.

அதேபோல் மாடுகள் அடைக்கப்படும் பட்டிகளிலும் சிறப்பு அலங்காரம் செய்து பட்டி வளைத்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கூழ்வார்த்தல் மற்றும் பொங்கலிட்டு வழிபாடுகள் நடந்தன. இதையடுத்து மாலையில் மாடுகள் சுதந்திரமாக நடமாடவிடப்பட்டன. இதேபோல், புரம் நாராயணிபீடம் கோசாலை, வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் கோசாலை, கோட்டை சுற்றுச்சாலை ஜெயின் கோசாலை ஆகியவற்றிலும் மாட்டுப்பொங்கல் பண்டிகை நேற்று களைகட்டியது.

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில், விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயில், திருவலம் வில்வநாதீஸ்வரர் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் நந்திபகவானுக்கு பல்வேறு காய்கறிகள், பழங்கள், பலகாரங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. இவற்றில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories:

>