×

காளை விடும் விழாவில் கலந்து கொள்ள வந்தபோது விபத்து : உடைந்த எலும்புகளை இணைத்து மாட்டுக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள்

வேலூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த காவலூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. இவருக்கு சொந்தமான ₹50 லட்சம் மதிப்புள்ள ‘செண்பகத்தோப்பு டான்’ என்ற செல்லப்பெயருடன் அழைக்கப்படும் காளை மாடு, வேலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் காளை விடும் விழாவில் கலந்து கொண்டு 6 முறை முதல் பரிசை தட்டிச் சென்றுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அணைக்கட்டில் நடந்த காளை விடும் விழாவில் கலந்து கொள்வதற்காக செண்பகத்தோப்பு டான் காளையை அதன் உரிமையாளர் அழைத்து வந்தார். காளை விடும் விழாவுக்கு முன்னதாக, சோதனை முறையில் காளையை விழா நடைபெறும் பாதையில் ஓட்டினார். அப்போது எதிர்பாராதவிதமாக அவ்வழியாக வந்த லோடு ஆட்டோ காளை மீது மோதியது. இந்த விபத்தில் மாட்டின் நெஞ்செலும்புகளில் 2 எலும்புகள் உடைந்தன. மேலும் அதன் வயிற்றுப்பகுதியிலும் பயங்கர காயம் ஏற்பட்டு, இதயம் வெளியில் தெரிந்தது.

உடனடியாக வேலூர் பன்முக கால்நடை மருத்துவமனைக்கு காளை மாட்டை வேன் மூலம் கொண்டு வந்தனர். இதையடுத்து கால்நடைத்துறை இணை இயக்குனர் டாக்டர் நவநீதகிருஷ்ணன் மேற்பார்வையில் படுகாயமடைந்த காளை மாட்டுக்கு டாக்டர்கள் ரவிசங்கர், ஆரேஷ், ஜோசப்ராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் மயக்க மருந்து செலுத்தி, அறுவை சிகிச்சை செய்தனர். உடைந்த எலும்புகள் சில்வர் பிளேட்டுகள் மூலம் இணைக்கப்பட்டன. தொடர்ந்து நரம்புகள், தசை நார்கள் நவீன சிகிச்சை மூலம் இணைக்கப்பட்டன. அதேபோல் வெளியில் தள்ளியிருந்த இதயமும் உள்ளே தள்ளப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை காலை 11 மணியில் இருந்து மாலை 6 மணி வரை நடந்தது. பின்னர் நேற்று காலை காளை மாடு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது.

இத்தகைய நவீன அறுவை சிகிச்சைகள் கால்நடை மருத்துவக்கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்டாலும், மாவட்ட அளவிலான மருத்துவமனைகளில் இதுதான் முதன்முறை என்றும், எனவே, கால்நடைகள் காயமடைந்தால் அடிமாட்டுக்கு விற்காமல் அவற்றை காப்பாற்றி பராமரிக்க வேண்டும்.
அறுவை சிகிச்சை மேற்கொண்ட காளை மாட்டுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படும். முழுமையாக குணமடைந்ததும், சில்வர் பிளேட்டுகள் அகற்றப்படும். அதன் பிறகு மீண்டும் இந்த காளை மாடு பந்தயங்களில் சாதாரணமாக கலந்து கொள்ளலாம் என்று கால்நடைத்துறை இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.

Tags : Accident ,bull dropping ceremony ,Doctors , Bull dropping ceremony, bull, attended, accident
× RELATED புனே சொகுசு கார் விபத்து விவகாரம் ரத்த...