×

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி... முதல் தடுப்பூசி மாநில மெடிக்கல் கவுன்சில் தலைவருக்கு செலுத்தப்பட்டது

மதுரை,கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை மதுரை அரசு மருத்துவமனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.தமிழகத்திற்கு 5.36 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மற்றும் 20 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி கடந்த வாரம் வந்தது. அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த தடுப்பூசி பிரித்து அனுப்பப்பட்டது. உரிய வெப்பநிலையில் இந்த தடுப்பூசிகள் அனைத்தும் சேமிப்பு கிடங்குகிகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.இதையடுத்து நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் துவக்கி வைத்தார். முதல் கட்டமாக நாடு முழுவதும் 3,006 மையங்களில் சுமார் 3 கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி படிப்படியாக போடப்படுகிறது.

தமிழகத்தில் முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. இதில், 4.50 லட்சம் பேர், இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.இந்த நிலையில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையத்தில் இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணியை துவக்கி வைத்தார். முதல்வர் முன்னிலையில் இந்திய மருத்துவ சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் செந்தில், மதுரை அரசு மருத்துவமனை டீன் சங்குமணி, மதுரை மாவட்ட தலைவர் அழகு வெங்கடேஷ், பல்நோக்கு மருத்துவ பணியாளர் முத்துமாரி இவர்கள் உட்பட 10 பேர் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டனர்.

சென்னையில் ராஜிவ்காந்தி, ஓமந்தூரார், கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி, ராயப்பேட்டை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை ஆகிய அரசு மருத்துவமனைகள் உட்பட தமிழகம் முழுவதும் இன்று முதல் கட்டமாக 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் டீன் தோணிராஜனுக்கு கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டது.


Tags : Palanisamy ,Tamil Nadu ,President ,State Medical Council , Corona, Chief Palanisamy
× RELATED நாகை மீன்வள பல்கலை.க்கு ஜெயலலிதா பெயர்...