விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும்: மக்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு

புதுடெல்லி: ‘சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக பொதுமக்கள் குரல் கொடுக்க வேண்டும்,’ என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.  டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு நேற்று ஒன்பதாவது கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது. இதனையொட்டி, காங்கிரஸ் கட்சியின் சார்பில் விவசாயிகள் அதிகாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நேற்று விவசாயிகள் அதிகார தினம் கடைப்பிடிக்கப்பட்டது இதனையொட்டி, அனைத்து மாநில தலைநகரங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணி நடைபெற்றது. விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லியில் நடந்த போராட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் பேசிய ராகுல் காந்தி, ‘‘மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறும்வரை காங்கிரஸ் பின்வாங்காது.

இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு உதவாது. ஆனால், அவர்களின் வாழ்க்கையை முடித்துவிடும். இந்த சட்டங்கள் அம்பானி, அதானி போன்ற பெருநிறுவன முதலாளிகளுக்கு உதவுவதை குறிக்கோளாக கொண்டுள்ளன,” என்றார்.    ‘விவசாயிகளின் அதிகாரங்களுக்காக குரல் கொடுங்கள்,’ என்ற  நிகழ்ச்சியில் பங்கேற்றது தொடர்பாக ராகுல் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘அகந்தை கொண்ட மோடி அரசுக்கு எதிராக தங்களின் உரிமைகளை பெறுவதற்காக விவசாயிகள் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அட்டூழியங்களுக்கு எதிராகவும் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராகவும் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் இந்த பிரசாரத்தில் இணைந்து,  சத்தியாகிரகத்தில் கலந்து கொள்ள வேண்டும்,’ என கூறியுள்ளார்.

Related Stories:

>