ஏகனாம்பேட்டை ஊராட்சியில் சேறும் சகதியுமான சாலையால் பொதுமக்கள் பாதிப்பு: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம் ஏகனாம்பேட்டையில் உள்ள சாலைகள், கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையால், சேறும் சகதியுமாக மாறிவிட்டது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். இதனை அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர் என புகார் எழுந்துள்ளது. வாலாஜாபாத் ஒன்றியம் ஏகனாம்பேட்டை ஊராட்சியில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு 5க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இதில் ராணி அம்மன் கோயில் பகுதிக்கு செல்லும் தெரு மட்டும் கடுமையாக சிதிலமடைந்து காணப்படுகிறது.லேசான மழை பெய்தாலும், இப்பகுதி சேறும் சகதியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற  நிலைக்கு மாறிவிடுகிறது. இதனால் இங்கு வசிக்கும் மக்கள் கடும் சிரமம் அடைகின்றனர். இதையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையால், அந்த தெரு முழுவதும் சேறும் சகதியுமாக மாறிவிட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஏகனாம்பேட்டை ஊராட்சி ராணி அம்மன் கோயில் தெருவை பள்ளி மாணவர்களும், கோயிலுக்கு செல்லும் பக்தர்களும், பல்வேறு பணிகளுக்கு பொதுமக்களும்  தினமும் பயன்படுத்துகின்றனர்.ஆனால், லேசான மழை பெய்தாலே இந்த தெரு முழுவதும் சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. இதில் நடந்து செல்ல முடியாமல் மக்கள் கடும் சிரமம் அடைகின்றனர். முதியோர், சேற்றில் வழுக்கி விழுந்து காயமடைகின்றனர். இந்த தெருவை சீரமைக்க வேண்டும் என பலமுறை ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனை மாவட்ட நிர்வாகம்  ஆய்வு செய்து, இங்கு புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories:

>