சுற்றுலா பயணிகள் செல்ல தடை 3 நாட்கள் தொடர் விடுமுறையால் வாழ்வாதாரம் பாதிப்பு: மாமல்லபுரம் வியாபாரிகள் குமுறல்

மாமல்லபுரம்: தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், சாலையோர வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிப்படைந்ததாக வேதனையுடன் கூறுகின்றனர். பொங்கல் பண்டிகை, திருவள்ளுவர் தினம், காணும் பொங்கல் ஆகிய தொடர் விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கில் சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் கடற்கரையில் கூடுவது வழக்கம். தற்போது, உருமாறிய கொரோனா பரவும் நிலை உள்ளதால், 15, 16, 17 ஆகிய தேதிகளில் மாமல்லபுரம் கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல, தமிழக அரசு தடைவித்தது. இதையொட்டி, மாமல்லபுரம் தொல்லியல் துறை அதிகாரிகள், மத்திய தொல்லியல் துறையிடம் அனுமதி கடிதம் பெற்று மேற்கண்ட 3 நாட்கள் மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம் மற்றும் கடற்கரை கோயில் உள்ளிட்ட பல்லவ சிற்பங்களை சுற்றி பார்க்க அனுமதி இல்லை என அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

மாமல்லபுரத்துக்கு சுற்றுலா பயணிகள் வர தடை, பல்லவ சிற்பங்கள் மூடப்படும் என்ற அறிவிப்பால், சாலையோர கடை வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரி, சங்கு மணி விற்பவர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், புகைப்பட கலைஞர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், ஓட்டல், ரிசார்ட், தங்கும் விடுதிகள், பண்ணை வீடுகள் உள்ளிட்ட அனைத்து வியாபாரிகளும் தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது என வேதனையுடன் கூறுகின்றனர்.

திருப்பி அனுப்பிய போலீசார்

3 நாட்களுக்கு மாமல்லபுரம் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் வருதவற்கு தமிழக அரசு தடை விதித்தது. மேலும், வெண்ணை உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில், கிருஷ்ணா மண்டபம், புலிக்குகை உள்பட பல்லவ சிற்பங்களும், தொடர்ந்து 3 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், மாமல்லபுரம் இசிஆர் நுழைவாயில் அருகே ஏஎஸ்பி சுந்தரவதனம் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் மாமல்லபுரம் வடிவேல்முருகன், திருக்கழுக்குன்றம் முனிசேகர் மற்றும் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மாமல்லபுரம் நுழைவாயில் அருகே சாலையில் தடுப்புகள் வைத்து சென்னை, காஞ்சிபுரம், தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம் உள்பட பல பகுதிகளில் இருந்து வந்த வாகனங்களை அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர். அதில், விடுதிகளில் தங்க அறை முன்பதிவு செய்தவர்களின் கார்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. அரசு பஸ்களும் மாமல்லபுரம் நகருக்குள் வர அனுமதிக்கவில்லை. பஸ்களில் வந்த பயணிகளை, நுழைவாயில் அருகே போலீசார் இறக்கி விட்டனர். சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லாததால், மாமல்லபுரம் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories:

>