×

ஊழியர்கள் தரக்குறைவாக பேசுவதை கண்டித்து காமாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் திடீர் தர்ணா: காஞ்சிபுரத்தில் பரபரப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில், ஊழியர்கள் தரக்குறைவாக பேசுவதை கண்டித்து பக்தர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரபப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில், கொரோனா ஊரடங்கில் பல தளர்வுகளுக்கு பின் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கோயில் கொடிமரம் மற்றும் கோயிலை வலம் வருவதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கோயில் காவலர்கள், பக்தர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வது, இரவு பள்ளியறை பூஜையின்போது பக்தர்கள் கலந்து கொள்ள தடைவிதிப்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுபற்றி கோயில் அலுவலக மேலாளர் காரியம் மற்றும் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், கோயில் ஊழியர்களை கண்டித்து, காமாட்சி அம்மன் கோயில் அலுவலகம் முன்பு நேற்று காலை பக்தர்கள் திரண்டு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து கோயில் அதிகாரிகள், அங்கு சென்று தர்ணாவில் ஈடுபட்ட பக்தர்களிடம் சமரசம் பேசினர்.. பின்னர், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.



Tags : Devotees ,temple protest ,Kamatchi Amman , Devotees at Kamatchi Amman temple protest against poor staffing
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...