இன்று காணும் பொங்கல் விழா கோவளம் கடலுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை

திருப்போரூர்: இன்று காணும் பொங்கல் விழாவையொட்டி, கோவளம் கடலுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொங்கல் விழாவின் கடைசி நாள் விழாவான காணும் பொங்கல் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி லட்சக்கணக்கானோர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பொழுதுபோக்கு மையங்களுக்கும், கடற்கரை நகரங்களான கோவளம் மற்றும் மாமல்ல புரத்துக்கு வருவார்கள். பண மதிப்பிழப்பு, ஜெயலலிதா மரணம், வர்தா புயல் மற்றும் 2015 கனமழை வெள்ளம் ஆகியவற்றால் கடந்த 4 ஆண்டுகளாக புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டங்கள் குறைவாகவே இருந்தன. கடந்த ஆண்டு மார்ச் இறுதி முதல் 10 மாதங்களுக்கு மேலாக கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலாத் தலங்கள், கடற்கரைகள் மூடப்பட்டன. தற்போது, சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் கடந்த ஆண்டுகளை விட அதிக கூட்டம் கிழக்கு கடற்கரை சாலைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் கொரோனா தொற்றின் மற்றொரு வடிவம் உருவெடுத்து பல்வேறு நாடுகளில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இதையொட்டி, தமிழகத்தில் அதிக மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது.புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதித்து, கடும் கண்காணிப்பு போடப்பட்டது. அதேபோல் காணும்பொங்கல் கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்று பொதுமக்கள் யாரும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு படகுத்துறை, தனியார் கேளிக்கை மையங்கள், கோவளம் கடற்கரை போன்ற இடங்களுக்கு கூட்டமாக வர வேண்டாம் என காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் கோவளம் கடற்கரை அருகே கடற்கரையை ஒட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாமல்லபுரம் ஏஎஸ்பி சுந்தரவதனம், கேளம்பாக்கம் ராஜாங்கம்  ஆகியோர் தலைமையில் 100 போலீசார் பாதுகாப்பு பணியில் நேற்று முதல் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>