×

ஏகாம்பரநாதர் கோயிலில் பார்வேட்டை உற்சவத்துக்கு தடை: பக்தர்கள் கடும் அதிருப்திஏகாம்பரநாதர் கோயிலில் பார்வேட்டை உற்சவத்துக்கு தடை: பக்தர்கள் கடும் அதிருப்தி

காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோயிலில், இந்தாண்டு பார்வேட்டை உற்சவத்துக்கு, மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. இதனால், பக்தர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.  காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில், பொங்கல் திருவிழாவை தொடர்ந்து காணும் பொங்கல் தினத்தில் பார்வேட்டை உற்சவம் வெகு விமரிசையாக நடக்கும். பார்வேட்டை உற்சவத்தை முன்னிட்டு அதிகாலையில் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள விகடசக்கர விநாயகர், ஏகாம்பரநாதர் மூலவர் களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கும்.  பின்னர், திம்மசமுத்திரத்துக்கு புறப்படும் ஏலவார் குழலி சமேத ஏகாம்பரநாதருக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்படும். அங்கிருந்து புறப்படும் ஏகாம்பரநாதரை காஞ்சிபுரம் முதல் திம்மசமுத்திரம் வரை பொதுமக்கள் மாக்கோலமிட்டு உற்சவரை வரவேற்பார்கள்.

இந்த நிகழ்ச்சியில், அலங்கார குடை, சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பதாகைகள் ஏந்தியபடி, கோலாட்டம், கேரள செண்டை வாத்தியம், கர்நாடக டிரம்ஸ் இசை, காவடியாட்டம், கோல் சுற்றுதல், கரகாட்டம், மயிலாட்டம், புலியாட்டம், தாரை, தப்பட்டை, யானை, குதிரை, காளை ஆகியவைகளுடன் உற்சாகமாக ஊர்வலம் நடப்பது வழக்கம்.இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக இந்தாண்டு  பார்வேட்டை உற்சவத்துக்கு மாவட்ட நிர்வாகம், அனுமதி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. பொங்கல் திருவிழாவின் ஒரு பகுதியாக சிறப்பாக கொண்டாடப்படும் பார்வேட்டை உற்சவத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.




Tags : Devotees , Ekambaranathar temple bans Parvati festival
× RELATED கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி