×

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு: வெற்றிநடை போடும் தமிழகத்துக்கு அச்சாணியாக இருப்பது காவல்துறை

சென்னை:   பொங்கலை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் சென்னை, புனித தோமையார்மலை ஆயுதப்படை வளாகத்தில் காவலர்களின் குடும்பத்தினருடன் நடந்த, `தைப்பொங்கல் கொண்டாட்டம் 2021’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
விழாவில் ஊரக தொழில் துறை அமைச்சர் பென்ஜமின், உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், தமிழக டிஜிபி திரிபாதி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அமைதி, வளம், வளர்ச்சி என்ற வழியில், தமிழக அரசு இன்றைக்கு பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டு, நாட்டிற்கே முன்னுதாரணமாக பல்வேறு விருதுகளை பெற்று வெற்றிநடை போட்டு வருகிறது. வெற்றிநடை போடும் தமிழகத்திற்கு அச்சாணியாக இருப்பது வீரநடை போடும் தமிழ்நாடு காவல் துறை என்றால் அது மிகையல்ல. தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்வதற்கு காவல் துறையின் பங்களிப்பு அளப்பரியது.

காவல் ஆளிநர்களின் மிகைநேர பணிகளுக்கான மதிப்பூதியம் 200 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டின் அமைதிக்கு துணை நிற்கும் காவல் துறைக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் அரசு என்றென்றும் துணை நிற்கும்.  இவ்வாறு அவர் பேசினார். சேலத்தில் பொங்கல் விழா: முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் இருந்து காரில் இடைப்பாடி சிலுவம்பாளையத்திற்கு சென்றார். அங்கு தனது வீட்டிற்கு பின்புறம் உள்ள பாலமுருகன் கோயிலில், குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களுடன் பொங்கல் விழாவை கொண்டாடினார். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு, சர்க்கரை பொங்கலை குழந்தைகளுக்கு வழங்கினார். பின்னர், தனது வீட்டில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு பழம் கொடுத்தார்.


Tags : Edappadi Palanisamy ,Tamil Nadu , Chief Minister Edappadi Palanisamy praised: Police is the key to a successful Tamil Nadu
× RELATED நிலையான கொள்கையே இல்லாத கட்சி பாமக: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்