பறிமுதல் வாகனங்கள் பல ஆண்டாக தேக்கம்: விஷப்பூச்சிகள் வசிப்பிடமான ஆர்டிஓ அலுவலகம்: ஊழியர்கள், பொதுமக்கள் அச்சம்

பெரம்பூர்: சென்னையில் வட்டார போக்குவரத்து அலுவலர்களால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள், அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. குறிப்பிட்ட நபர்கள் பறிமுதல் வாகனங்களை திரும்ப பெற்றுக்கொள்ளவில்லை என்றால், அவைகளை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஏலம் விடுவது வழக்கம். ஆனால், பல வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பறிமுதல் வாகனங்களை ஏலம் விடாததால், குடோன் போல் காட்சியளிக்கிறது. இதனால், இட நெருக்கடி ஏற்படுவதுடன், விஷப்பூச்சிகள் வசிப்பிடமாக மாறி வருகிறது.  குறிப்பாக, புளியந்தோப்பு பவுடர் மில் சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பல ஆண்டுகளுக்கு முன் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இதுவரை ஏலம் விடப்படாததால், வளாகம் முழுவதும் வாகன குவியலாக காட்சியளிக்கிறது. நுழைவாயிலிலும் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் ஒத்தையடி பாதை போல் காட்சியளிக்கிறது. இந்த வாகனங்களில் மழைநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுவதோடு, கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது.

பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அந்த இடம் புதர் மண்டி விஷப்பூச்சிகள் வசிப்பிடமாக மாறியுள்ளது. இங்கிருந்து அடிக்கடி பாம்புகள் அலுவலகத்திற்கு படையெடுப்பதால் ஊழியர்கள், பொதுமக்கள் அச்சத்துடன் வந்து செல்லும் நிலை உள்ளது.  அலுவலகத்தின் வெளியிலும் இதுபோன்ற வாகனங்களை போட்டு வைத்துள்ளதால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் அதில் அமர்ந்து கஞ்சா புகைக்கின்றனர். இதனால் இரவு நேரங்களில் இந்த பவுடர் மில் சாலையை பயன்படுத்த பொதுமக்கள் அச்சப்படும் நிலை உள்ளது. அதுமட்டுமின்றி, இந்த வாகனங்களில் இருந்து டயர் மற்றும் உதிரி பாகங்களை சமூக விரோதிகள் திருடி செல்கின்றனர். இந்த வாகனங்களை முறையாக ஏலம் விட்டால் அரசுக்கு நல்ல வருவாய் கிடைக்கும். ஆனால் அவ்வாறு செய்யாமல் பல ஆண்டுகளாக குவித்து வைத்துள்ளதால் துருப்பிடித்து, கடைசியில் எடைக்கு போடும் நிலை ஏற்படுகிறது.

இதனால், அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும் இந்த அலுவலகத்தில் உள்ள  இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அப்புறப்படுத்தினால் வட்டார போக்குவரத்து அலுவலகத்திலேயே இருசக்கர வாகன ஓட்டிகள்  தேர்வு நடத்த முடியும். எனவே, இந்த வாகனங்களை முறையாக ஏலம் விட்டு, அலுவலக வளாகத்தை தூய்மைப்படுத்த வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories:

>