×

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் 28 ஆண்டுகளுக்கு பின்னர் மக்களை மிரட்டிய வெள்ளம்: 5 ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பீதி

ஸ்ரீவைகுண்டம்: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று பொங்கலையொட்டி காலை முதல் இரவு 7 மணி வரை சற்று வெறித்திருந்த மழை மீண்டும் விடிய விடிய பெய்தது. பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைப்பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் முறையே 18.5 செமீயும் (185 மிமீ), 16.5 செ.மீயும் (165 மிமீ) மழை பெய்தது. இதனால் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் நேற்று மாலை வினாடிக்கு 81 ஆயிரம் கனஅடி தண்ணீர் சென்றது. நேற்றுமுன்தினமே தாமிரபரணி ஆற்றில் 70 ஆயிரம் கனஅடிக்கு மேல் சென்றதால் முத்தாலங்குறிச்சி, கருங்குளம், கொங்கராயகுறிச்சி, சிவராமங்கலம், ஆழ்வார்திருநகரி, ஆழ்வார்தோப்பு ஆகிய ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

இதனையடுத்து,  வாழை மற்றும் நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. புளியங்குளத்திலும், கருங்குளத்திலும் மெயின்ரோடு தண்ணீரில் மூழ்கியதால் நெல்லை- திருச்செந்தூர் பஸ் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூர் அருகே புளியங்குளத்தில் கட்டப்பட்டிருந்த முதுமக்கள் தாழி மையத்திற்குள் சமீபத்தில் ஆதிச்சநல்லூர் அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. 2 நாட்களாக பெய்த பலத்த மழையால் இந்த மையத்திற்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் இந்த மையத்தை வேறிடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் 28 ஆண்டுகளுக்கு பின்னர் மக்களை மிரட்டும் அளவுக்கு வெள்ளம் வந்துள்ளது.

தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன், டிஎஸ்பி வெங்கடேசன் ஆகியோர், தண்ணீர் ததும்பி செல்லும் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணை, கருங்குளம் பகுதி, சிவராமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

தூர் வார ஒதுக்கிய பணம் எங்கே?
கருங்குளம் மக்கள் நலக்குழு செயலாளர் உடையார் கூறுகையில், ‘‘தூத்துக்குடி மாவட்டத்தில் 425 குளங்கள் தூர் வாரியதாக அரசு தெரிவித்துள்ளது. இதற்காக மருதூர் மேலக்கால் பாசன வாய்க்கால் குளங்கள் தூர் வார ரூ.57 லட்சத்து 12 ஆயிரத்து 440ம், முத்தாலங்குறிச்சி முக்கவர் வாய்க்கால் தூர் வார ரூ.2 கோடியே 93 லட்சத்து 62 ஆயிரத்து 838ம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் மருதூர் மேலக்காலில் தூதுகுழிகுளம், கிருஷ்ணன்குளம்,பெட்டைகுளம், பெரியகுளம் ஆகிய குளங்கள் தூர் வாரப்படவில்லை. குளங்களை முறையாக தூர் வாரியிருந்தால் கடலில் பல ஆயிரம் கனஅடி தண்ணீர் வீணாவதை தவிர்த்திருக்கலாம்’’ என்றார்.

Tags : Floods ,river ,Srivaikuntam Tamiraparani ,towns , Srivaikuntam Tamiraparani river floods for 28 years:
× RELATED நெல்லை அருகே கோயிலுக்கு வந்த போது பரிதாபம் ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி