அமைச்சர் தனஞ்செய் முண்டே மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து கட்சியில் விரைவில் ஆலோசனை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பேட்டி

மும்பை: மகாராஷ்டிரா மாநில சமூக நலத்துறை அமைச்சர் தனஞ்செய் முண்டே மீது பெண் ஒருவர் அளித்த புகார் குறித்து கட்சியில் விரைவில் ஆலோசிக்கப்படும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநில அமைச்சரான தேசியவாத காங்கிரசை சேர்ந்த தனஞ்செய் முண்டே தன்னை  பாலியல் பலாத்காரம் செய்ததாக 37 வயத பெண் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.  அதில் 2006ம் ஆண்டு அமைச்சர்  முண்டே தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அதுபற்றி  ஒஷிவாரா போலீசில் புகார் செய்ததாகவும் ஆனால் தனது புகார் மீது எந்த  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக கடந்த 10ம் தேதி  போலீஸ் கமிஷனருக்கு தான் கடிதம் எழுதியதாகவும் அந்த பெண் தெரிவித்தார். தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை அமைச்சர் முண்டே மறுத்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் `` தன் மீது அந்த பெண்  கூறிய குற்றச்சாட்டில் உண்மையில்லை. ஆனால் அந்த பெண்ணின் சகோதரியுடன்  எனக்கு தொடர்பிருந்தது உண்மைதான். என் மூலம் அந்த பெண்ணுக்கு 2 குழந்தைகள் பிறந்தன. இது எனது மனைவிக்கும், உறவினர்களுக்கும்,  நண்பர்களுக்கும் நன்கு தெரியும். புகார் கூறிய பெண்ணின் சகோதரிக்கு என் மூலம் பிறந்த இரண்டு குழந்தைகளையும் எனது குடும்பத்தார்  ஏற்றுக்கொண்டுவிட்டனர். புகார் கூறிய பெண்ணும் அவருடைய சகோதரியும்  இப்போது என்னை பிளாக் மெயில் செய்ய முயற்சிக்கிறார்கள்.

என்னுடன் தொடர்பில்  இருந்த பெண் 2019ம் ஆண்டில் இருந்து என்னை பற்றி கேவலமாக பிரசாரம் செய்து  வருகிறார். அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி போலீசில் புகார்  செய்துள்ளேன். ஐகோர்ட்டிலும் மனு செய்துள்ளேன்’’ என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து தன் மீதான குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்க கட்சி தலைவர் சரத்பவார் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் என்னை பதவி விலகவும் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என முன்டே தெரிவித்தார். இந்நிலையில் அமைச்சர் தனஞ்செய் முண்டே மீதான பாலியல் புகாரை கட்சி தீவிரமாக எடுத்து விசாரிக்கும் என கட்சியின் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: அமைச்சர் முன்டே மீதான பாலியல் குற்றச்சாட்டு தீவிரமான பிரச்னை.

இது குறித்து நாங்கள் விரைவில் கட்சியில் ஆலோசனை நடத்துவோம். அமைச்சர் முன்டே நேற்று முன்தினம் என்னை சந்தித்து தன்மீதான குற்றச்சாட்டு குறித்து விளக்கமளித்தார். அவர் மீதான குற்றசாட்டு குறித்து முழு விவரம் தெரியவந்ததும் மேலும் என்ன நடவடிக்கை எடுப்பது என விரைவில் முடிவு செய்வோம். இதேபோல் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மற்றொரு அமைச்சரான நவாப் மாலிக்கின் மருமகனை போதை பொருள் கட்டுப்பாட்டு துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் அந்த புலனாய்வு நிறுவனத்தின் விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். மாலிக் மீது தனிப்பட்ட குற்றச்சாட்டு எதுவும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories:

More