×

மகாராஷ்டிராவில் பலத்த பாதுகாப்புடன் 14,234 கிராம பஞ்சாயத்துக்கு இன்று தேர்தல்

* 14 கிராமங்கள் புறக்கணிப்பு
* 20,000 பேர் போட்டியின்றி தேர்வு

மும்பை: முறைகேடு காரணமாக 2 கிராமங்களில் தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் 14,234 கிராம பஞ்சாயத்துகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி வாக்குப்பதிவு மையங்களில் பலத்த போலீஸ்  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதில் 14 கிராமங்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. வாக்கு எண்ணிக்கை வரும் 18ம் தேதி நடைபெறும்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் 31 முதல் ஜூன் வரையிலான  காலத்தில் முடிவடைந்த 1,566 கிராம பஞ்சாயத்துகளின் தேர்தல் கடந்த ஆண்டு  மார்ச் 31ம் தேதி நடைபெற இருந்தது.  இந்நிலையில் கொரோனா தொற்று பரவ தொடங்கியதை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கூடுதலாக, புதிதாக உருவாக்கப்பட்ட கிராம பஞ்சாயத்துகளுக்கும் தேர்தல் இன்று நடத்தப்படுகிறது.  

 தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற தலைவர் பதவி ஏலம் விடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபோல் சொந்த பணத்தில் இருந்து திட்டங்கள் செயல்படுத்துவதாக சில வாக்காளர்கள் பிரசாரம் செய்தனர். தங்கள் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றால் அரசு நலத்திட்டங்களை அந்த கிராமத்தில் விரைந்து செயல்படுத்தப்படும் என ஆளும்கட்சி தலைவர்கள் உறுதி அளித்தனர். இவை பெரும் சர்ச்சை ஏற்படுத்தின. எனவே, பதவிகளை ஏலம் விடுவது மற்றும் தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதன்படி நாசிக் மாவட்டத்தின் உம்ரனே நந்துர்பர் மாவட்டத்தின் கோண்டமலி ஆகிய இரு கிராமங்களின் நடைபெற இருந்த தேர்தலை, தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

எனவே, பதவியை பிடிக்க வன்முறை, வாக்குச்சாவடியை கைப்பற்றவது உள்ளிட்ட சம்பவங்களை தடுக்க, இன்று வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதையொட்டி வாக்குப்பதிவு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று காலை 7.30 மணி தொடங்கி மாலை 5.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை  வரும் 18ம்தேதி நடைபெறும்.  கட்சிரோலி மாவட்டம் மற்றும் கோண்டியா மாவட்டத்தில் நான்கு தாலுகாக்களைத் தவிர அனைத்து இடங்களிலும் காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

இந்த இரு மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட 4 தாலுகாக்களில் மட்டும் மாலை 3 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைகிறது.  மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்  என மாநில தேர்தல் ஆணையர் மதன் தெரிவித்தார். இந்நிலையில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவை நவி மும்பை மாநகராட்சிக்கு உட்பட்ட 14 கிராமங்கள் புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளன. புனே மாவட்டத்தில் 746 கிராம பஞ்சாயத்துக்களில் 81 இடங்களில் ஒரு வேட்பாளர் மட்டும் களத்தில் உள்ளனர். நந்துர்பரில் 87 கிராம பஞ்சாயத்துக்களில் 22 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

இது தொடர்பாக தானே மாவட்ட துணை கலெக்டர் பாலசாகேப் வாக்சோர் கூறியதாவது: தானே மாவட்டத்தில் 143 கிராம பஞ்சாயத்துக்களுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில் 5 கிராம பஞ்சாயத்துக்களில் உள்ள 14 கிராமங்கள் இன்று நடைபெறும் வாக்குப்பதிவை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளன. இதனால் இங்கு வெள்ளிகிழமை தேர்தல் நடைபெறாது. கடந்த 15ஆண்டுகளாக இநத் கிராமங்களை சேர்ந்தவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2 பொதுத்தேர்தல் உள்பட பல தேர்தல்களை புறக்கணித்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைவர் பதவி ₹2 கோடிக்கு ஏலம்
இந்நிலையில் நாசிக் மாவட்டத்தின் உம்ரனே நந்துர்பர் மாவட்டத்தின் கோண்டமலி ஆகிய இரு கிராமங்களின் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் பதவிக்கு இன்று நடக்க இருந்த வாக்குபதிவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பஞ்சாயத்துகளின் தலைவர் பதவியை பிடிக்க தலா ₹2 கோடி மற்றும் கவுன்சிலர்கள் பதவி தலா ₹42 லட்சத்துக்கும் ஏலத்தில் விடப்பட்டதாக வீடியோ ஆதாரம் வெளியானதை தொடர்ந்து இந்த இரு கிராமங்களின் பஞ்சாயத்து தேர்தலை ரத்து செய்து மாநில தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

கொரோனா நோயாளிகளுக்கு கடைசி அரை மணி நேரம்
கொரோனா நோயாளிகள் வாக்களிக்க வாக்குப்பதிவு முடியும் நேரத்தில் கடைசி அரைமணிநேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர்களுக்கு தனியாக டோக்கன் வழங்கப்படும். இது தவிர வாக்களிக்க வரும் அனைவருக்கும் வெப்பநிலை சோதனை செய்யப்படும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையர் மதன் தெரிவித்துள்ளார். அவர் மேலும்  கூறுகையில், ``வாக்கு பதிவுக்கு முன் வாக்குபதிவு மையம் மற்றும் வாக்களிக்க  பயன்படும் பொருட்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்படும். சமூக இடைவெளியை  கடைபிடிப்பது அவசியம். கொரோனா தொற்று காரணமாக முகக்கவசம் அணிந்து  வாக்களிக்க வரவேண்டும். அவ்வாறு வரும்போது வாக்காளரை அடையாளம் காண அவர்களது முகக்கவசம் அகற்றப்படும் என மதன் தெரிவித்தார்.


Tags : Elections ,Maharashtra ,Gram Panchayats , 14,234 with heavy security in Maharashtra Election for Grama Panchayat today
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...