×

மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகத்துடன் தொடங்கியது

மதுரை: மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று 15-ம் தேதி மதுரை மாவட்டம் பாலமேடு மஞ்சமலை ஆற்று திடலில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.  ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 800 காளைகள், 651 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். பாலமேடு ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளை சீறிப்பாய்ந்தது. இந்த ஆண்டு கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன், அரசு வகுத்து தந்துள்ள விதிகளின்படி ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்த போட்டியில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள், மாடுகளின் உரிமையாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டவர்கள் மட்டுமே போட்டிக்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டியை காண ஏராளமான பார்வையாளர்கள் வந்துள்ளனர். அவர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாடுபிடி வீரர்களுக்கு களத்தில் காயம் ஏற்படக் கூடாது என்பதற்காக தரையில் வைக்கோல்கள் பரப்பப்பட்டுள்ளன. சமூக இடைவெளியுடன் அமரும் வகையில் பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட்டுள்ளது. இருபுறமும் மரக்கட்டைகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மாலை 4 மணி வரை போட்டி நடைபெறுகிறது.

Tags : Palamet ,Madurai district , Jallikattu competition started at Palamettu, Madurai
× RELATED கடைகளை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு...