கோலாகலமாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு: மாடுபிடி வீரர், பார்வையாளர் என 58 பேர் காயம்..!

மதுரை: பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றுள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் விழாவின் ஒரு பகுதியான உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை இன்று காலை 8 மணியளவில் அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, திருப்பரங்குன்றம் எம்எல்ஏ சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தாண்டு, முதல் போட்டி, மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று தொடங்கியது.சேலம், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. அதன்படி, ‘புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ராயபுரத்திலும், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கூலமேட்டிலும், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே சூரியூரிலும் ஜனவரி 15- ஆம் தேதி முதல் ஜனவரி 31- ஆம் தேதி வரை ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 788 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதும் அதேபோல் காளைகளை பிடிக்க 430 காளையர்கள் பதிவு செய்யப்பட்டு களம் கண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மதுரையில் உள்ள பாலமேடு, அலங்காநல்லூர் மற்றும் அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் புகழ் பெற்றது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாட்டின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர், பார்வையாளர் என 58 பேர் காயம் அடைந்துள்ளனர். திருநாவுக்கரவு, விஜய் ஆகிய இரு இளைஞர்கள் தலா 26 காளைகளை அடக்கி முதல் பரிசு வென்றனர். G.R. கார்த்திக் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டது.

Related Stories: