×

சிக்கன் பிரைட் ரைசுக்கு பணம் கேட்டதால் மிரட்டல் ‘அமித்ஷா பிஏவுக்கு போன் போடவா... ஆயிரம் பேரை இறக்குவோம்...’ திருவல்லிக்கேணி பாஜ பிரமுகர் கைது

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு கடையில் ஒருவர் தன்னை அப்பகுதி பாஜ பகுதி செயலாளர் என்று கூறி, சிக்கன் பிரைட் ரைஸ் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் கடை உரிமையாளரை மிரட்டுவதும் தடுக்க வந்த போலீசாரை ஆபாசமாக பேசும் சம்பவமும் வீடியோவில் பதிவாகி உள்ளது. அது, வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், சம்பந்தப்பட்ட நபரை சமாதானப்படுத்தி அங்கிருந்து புறப்பட சொல்லும் போலீசாருக்கும் அந்த நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. அதற்கு அந்த நபர், ‘நான் ஒன்னும் பெரிய ஆள் எல்லாம் இல்லண்ணா.. இந்த திருவல்லிக்கேணி பாஜவின் பகுதி செயலாளர். சாதாரண ஆள் தான்’ என கிண்டலடிக்கும் வகையில் பேசுகிறார்.

அப்போது ஒரு போலீஸ்காரர், ‘இப்போது அவரை அனுப்பி விடுங்கள் காலையில் பார்த்துக் கொள்ளலாம்’ என்று கடை உரிமையாளரிடம் சொல்கிறார். அதற்கு கடை உரிமையாளர், ‘இப்படி செய்தால் நாளை இங்கு நான் ஓட்டல் நடத்த முடியாது’ என்கிறார். அதை கேட்ட உடன் மீண்டும் அந்த நபர் திரும்பி வந்து, ‘நாளை எப்படி இந்த ஓட்டல் நடக்கும்.. மதக்கலவரம் நடக்கும்’ என்று போலீசார் முன்னிலையில் மிரட்டுகிறார். மேலும், அந்த நபர் அருகில் இருந்த நண்பரை பார்த்து கையை காட்டி, ‘இவன் இந்து முன்னணி ஆள், நான் பாஜ ஆள். அவனை நான் இப்போது கன்ட்ரோல் பண்ணி ஆப் பண்ணி வைச்சிருக்கேன்’.. என்று மீண்டும் மிரட்டுகிறார்.

அங்கிருந்த போலீசார் மீண்டும் அந்த நபரை சமாதானம் பண்ணுகிறார்கள். ஆனால் அவர், ‘பாஜ ஆளுக்கு ஒரு மரியாதை இல்லையா?’ என்று போலீசாரிடம் கேட்கிறார். ஒரு கட்டத்தில் டென்ஷனான போலீசார் இங்கிருந்து புறப்பட போகிறாயா இல்லையா என்கின்றனர். உடனே, ‘உங்க பேச்சுக்கு மரியாதை கொடுத்து செல்கிறேன்’ என்கிறார். ஆனால் கடை உரிமையாளர், ‘சிக்கன் ரைசுக்கு பணம் கொடுத்துவிட்டு அனுப்புங்கள்’ என்கிறார்.உடனே டென்ஷனாகும் அந்த நபர், ‘என்னை பார்த்து அந்த கடைக்காரன் நக்கலா பேசுறான்’ என்று மீண்டும் சண்டைக்கு செல்கிறார். ஆபாசவார்த்தைகளால் திட்டிக் கொண்டே அந்த நபர், ‘அமித்ஷா பிஏவுக்கு போன் அடிச்சிறுவேன்.. கலவரம் ஆகிவிடும்..ஆயிரம் பேர் ரெடியா இருக்காங்க’.. என்று மிரட்டுகிறார்.. ‘நீங்க வீடியோ எடுக்கிற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை’ என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்கிறார். அத்துடன் வீடியோ முடிகிறது.

பாஜ பிரமுகரின் இந்த மிரட்டல் சம்பவம், சிக்கன் ரைஸ் சாப்பிட்டு விட்டு மது போதையில் பணம் தர முடியாது என்று திருவல்லிக்கேணியில் உள்ள கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இந்த வீடியோ தற்போது வாட்ஸ் அப் உள்ளிட்ட இணைதளங்களில் வைரலாகி வருவது பாஜ கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக, திருவல்லிக்கேணி போலீசார் பாஜ பகுதி செயலாளர் பாஸ்கரன், இந்து முன்னணி பிரமுகர் புருசோத்தமன் ஆகியோரை நேற்று இரவு கைது செய்தனர்.

Tags : BJP ,Thiruvallikkeni , Tiruvallikeni BJP leader arrested for threatening to ask for money for Chicken Fried Rice
× RELATED கன்னியாகுமரிக்கு வருகை தரும் பிரதமர்...