ரூ.971 கோடி செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுமான பணி நாளை துவக்கம்

புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டும் பணி நாளை தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ், டெல்லியில் ரூ.971 கோடி செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கு பிரதமர் மோடி கடந்த மாதம் அடிக்கல் நாட்டினார். ஆனாலும், மத்திய விஸ்டா திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டதால், கட்டுமான பணி தொடங்கப்படவில்லை. இதற்கிடையே, புதிய நாடாளுமன்ற கட்டிடம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது. கட்டுமானப் பணிகளை தொடங்குவதற்கு முன்பாக பாரம்பரிய குழு, சுற்றுச்சூழல் துறையிடம் உரிய ஒப்புதலை பெற உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது. இதன்படி, 14 பேர் கொண்ட பாரம்பரியக் குழு கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்தது.

இதைத் தொடர்ந்து, புதிய நாடாளுமன்றம் கட்டும் பணிகள் நாளை தொடங்கப்பட இருப்பதாக மத்திய அரசு வட்டார தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ், ராஜபாதையில் ஜனாதிபதி மாளிகையில் தொடங்கி இந்தியா கேட் வரை புதிய பிரதமர் குடியிருப்பு, பிரதமர் அலுவலகம், துணை ஜனாதிபதி மாளிகை ஆகியவை கட்டப்பட உள்ளது. இப்பணிகள் வரும் 26ம் தேதி குடியரசு தின அணிவகுப்பு முடிந்த பின் தொடங்கப்படுகிறது. இந்த பணிகள் அனைத்தும் அடுத்த 10 மாதங்களில் முடிக்கப்பட்டு, 2022ம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பு பேரணியை சீரமைக்கப்பட்ட ராஜபாதையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories:

>