×

புதிய தலைமைச் செயலாளர் யார்? 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கிடையே கடும் போட்டி

சென்னை: தமிழகத்தில் புதிய தலைமைச் செயலாளர் பதவியை பிடிப்பதில் 3 அதிகாரிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நிதித்துறை செயலாளராக இருந்த சண்முகம் கடந்த 2019ம் ஆண்டு பதவி ஏற்றார். அவரது பதவிக்காலம் கடந்த ஜூலை மாதத்துடன் முடிந்தது. பின்னர் அவரது பதவிக் காலம் 3 மாதம் நீட்டிக்கப்பட்டது. அக்டோபர் மாதம் ஓய்வு பெற இருந்தநிலையில், தமிழக அரசு கேட்டுக் கொண்டபடி, மேலும் 3 மாதம் பதவிக்காலத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி, இந்த மாதம் 31ம் தேதியுடன் அவர் ஓய்வு பெற வேண்டும். ஏற்கனவே அவருக்கு 3 மாதம் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்க தமிழக அரசு ஆர்வமாகத்தான் உள்ளது. ஆனால் ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி பார்த்தால், அவர் தலைமைச் செயலாளராக இருந்தால், தேர்தலுக்காக புதிய தேர்தல் தலைமைச் செயலாளர் என்ற புதிய பதவியை உருவாக்கி ஒருவரை தேர்தல் ஆணையமே நியமிக்க வேண்டியது வரும். தமிழக காவல்துறையில் இதுவரை இல்லாதபடி தேர்தல் டிஜிபி என்று 2 முறை தேர்தல் ஆணையம் நியமித்து வருகிறது.

அதேபோல தலைமைச் செயலாளர் பதவியிலும் ஒருவரை நியமிக்க வேண்டியது வரும். அதேநேரத்தில், அவருக்கு தொடர்ந்து 2 முறை பதவி நீட்டிப்பு வழங்கியதால், பல ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் இந்த மாதத்துடன் ஓய்வு பெற அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால் புதிய தலைமைச் செயலாளரை நியமிப்பது குறித்து தமிழக அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. அதில், பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றி தற்போது தமிழக பணியில் உள்ள டி.வி.சோமநாதன், உள்துறைச் செயலாளராக உள்ள எஸ்.கே.பிரபாகர், மத்திய அரசு பணியில் உள்ள ராஜிவ் ரஞ்சன் ஆகியோரது பெயர்கள் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

அதில் டி.வி.சோமநாதன், பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றியதால், சென்னையில் நடந்த அவரது மகள் திருமண வரவேற்பில், பிரதமர் மோடியே கலந்து கொண்டார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் கலந்து கொண்டார். இதனால் அவருக்கு தலைமைச் செயலாளர் பதவி கொடுக்க வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் மத்திய அரசுப் பணியில் உள்ள ராஜீவ் ரஞ்சன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவனித்து வரும் நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றியவர். இதனால் அவர் முதல்வருக்கு நெருக்கமாக இருந்தவர். அதேபோல, தற்போது உள்துறைச் செயலாளராக உள்ள எஸ்.கே.பிரபாகரும் குற்றச்சாட்டுக்கு ஆளாகாதவர். அவரும் தலைமைச் செயலாளர் பதவிக்கான போட்டியில் உள்ளார். இந்த 3 பேரில் ஒருவருக்குத்தான் தலைமைச் செயலாளர் பதவி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

அதேசமயம், சசிகலாவுக்கு நெருக்கமானவராக உள்ளவரும் தற்போது உள்ளாட்சித்துறை செயலாளருமான ஹன்ஸ்ராஜ் வர்மாவும், தலைமைச் செயலாளர் பதவியைப் பிடிக்க தீவிரமாக முயன்று வருகிறார். சசிகலா தற்போது அதிகாரத்தில் இருந்தால், அவர் ஏற்கனவே தலைமைச் செயலாளர் பதவியை பிடித்திருப்பார். தற்போது சசிகலா அதிகாரத்தில் இல்லாததால், தற்போது உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி மூலமாக தலைமைச் செயலாளர் பதவியை பிடிக்க தீவிரமாக முயன்று வருகிறார். ஆனால், அவருக்கு வாய்ப்புகள் குறைவு என்று கூறப்படுகிறது. இதனால் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்ற பரபரப்பு ஐஏஎஸ் அதிகாரிகளிடையே எழுந்துள்ளது.

Tags : Chief Secretary ,IAS officers , Who is the new Chief Secretary? Fierce competition between 3 IAS officers
× RELATED தடையின்றி குடிநீர் விநியோகம், கோடைகால...