×

பிரிஸ்பேனில் இந்திய அணி தீவிர வலைப்பயிற்சி

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய அணியுடன் 4வது மற்றும் கடைசி டெஸ்டில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்கள் நேற்று தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டனர். இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளிடையே மொத்தம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், அடுத்து மெல்போர்னில் நடந்த 2வது டெஸ்ட் இந்தியாவும் தலா விக்கெட் வித்தியாசத்தில் வென்று சமநிலை வகிக்க, சிட்னியில் நடந்த 3வது டெஸ்ட் எத்தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.

இந்நிலையில், 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நாளை தொடங்க உள்ளது. இப்போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் நேற்று தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டனர். தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இப்போட்டிக்கான வியூகங்கள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். வயிற்றுப் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு அவதிப்படுவதால் பிரிஸ்பேன் டெஸ்டில் இருந்து விலகிய வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பூம்ரா, நேற்றைய வலைப்பயிற்சியின்போது மைதானத்துக்கு வந்திருந்து வீரர்களை உற்சாகப்படுத்தினார். ரோகித், கில், கேப்டன் ரகானே ஆகியோர் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டனர். பூம்ராவுக்கு பதிலாக ஷர்துல் தாகூர் அல்லது நடராஜனும், ஜடேஜாவுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரும் களமிறங்க வாய்ப்பு உள்ள நிலையில், அந்த வீரர்களும் உற்சாகமாகப் பயிற்சி செய்தனர்.

இந்திய அணியில் பல வீரர்கள் காயத்தால் அவதிப்படும் நிலையில், களமிறங்கும் 11 வீரர்களைத் தேர்வு செய்வது அணி நிர்வாகத்துக்கு பெரிய சவாலாகவே உள்ளது. பிரிஸ்பேனில் இந்திய வீரர்கள் தங்கியுள்ள ஓட்டலில் அடிப்படை வசதிகள் கூட சரிவர இல்லாததையும், உதவிக்கு ஓட்டல் ஊழியர்கள் வராததால் கழிவறையை சுத்தம் செய்வது, படுக்கையை தயார் செய்வது போன்றவற்றையும் வீரர்களே செய்து கொள்ள வேண்டி இருப்பதை கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் கவனத்துக்கு பிசிசிஐ நிர்வாகிகள் கொண்டு சென்றனர். இதைத் தொடர்ந்து வீரர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா உறுதி செய்துள்ளது. ஆஸ்திரேலிய அணி வீரர்களும் நேற்று தீவிரமாக வலைப்பயிற்சி செய்தனர். தோள்பட்டையில் காயம் அடைந்துள்ள இளம் வீரர் புகோவ்ஸ்கி பயிற்சிக்கு வரவில்லை. வேகப் பந்துவீச்சாளர்கள் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசல்வுட் ஆகியோரும் ஓய்வெடுத்தனர்.


Tags : team ,Indian ,Brisbane , Indian team intensive web training in Brisbane
× RELATED மகளிர் கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு...