×

பாகிஸ்தானில் இருந்து ஜம்முவுக்குள் ஊடுருவ 100 அடி ஆழத்தில் சுரங்கப் பாதை: தீவிரவாதிகள் 4 ஆண்டாக பயன்படுத்தியது அம்பலம்

ஜம்மு: பாகிஸ்தானில் இருந்து ஜம்முவில் நுழைவதற்காக எல்லையில் தீவிரவாதிகள் அமைத்திருந்த 150 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து எல்லை வழியாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதால், எல்லை பகுதிகளில் இந்திய படைகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், தீவிரவாதிகளின் ஊடுருவல்கள் குறைந்துள்ளன. இந்நிலையில், ஜம்மு காஷ்மீருக்குள் நுழைவதற்காக சமீப காலமாக தீவிரவாதிகள் இருநாட்டு எல்லைக்கும் இடையே சுரங்கப்பாதைகள் அமைக்கின்றனர். கடந்த ஆகஸ்ட் 28, நவம்பர் 22 தேதிகளில் கத்துவா, சம்பா மாவட்டங்களில் சுரங்கப்பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால், வேறு ஏதேனும் சுரங்கப் பாதைகள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிய எல்லை பாதுகாப்பு படை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், ஹிரா செக்டார் பகுதியின் பாபியன் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு புதிய சுரங்கப்பாதை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து பாதுகாப்பு படை அதிகாரி ஜம்வால் கூறுகையில், ‘‘இந்த சுரங்கப்பாதை 150 மீட்டர் நீளத்திலும், 3 அடி சுற்றளவிலும், 100 அடி ஆழத்திலும் தோண்டப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதை பாகிஸ்தானில் உள்ள சாகர்கர் பகுதியில் சென்று முடிகிறது. மேலும், இந்த சுரங்கப்பாதைகள் மணல் மூட்டைகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. அந்த மணல் மூட்டைகளில் பாகிஸ்தான் குறியீடுகளும் உள்ளன. தீவிரவாதிகள் இதன் மூலம் ஊடுருவினார்களா, சுரங்கப்பாதை அமைக்க யாரேனும் உதவினார்களா என்பது பற்றி விரிவான விசாரணை நடந்து வருகிறது.

இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மணல் மூட்டைகளில் 2016 - 2017ம் ஆண்டு குறியீடு இருப்பதால், தீவிரவாதிகள் இதை நீண்ட காலமாக பயன்படுத்தி வந்துள்ளனர் என்பது தெரிகிறது,’’ என்றார். நள்ளிரவிலும் பாக். தாக்குதல்: சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்ட நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில், எல்லை கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் திடீர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டது. இதற்கு, இந்திய வீரர்களும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். நள்ளிரவு 2.25 வரையிலும் இந்த சண்டை நீடித்தது. இந்த மோதலில் இரு தரப்பிலும் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.

Tags : tunnel ,Jammu ,Pakistan ,militants , 100-foot-deep tunnel from Pakistan to Jammu: Exposed by militants for 4 years
× RELATED இந்தியாவுடன் மீண்டும் வர்த்தக உறவு: பாகிஸ்தான் பரிசீலனை